‘கோவிட் தடுப்பூசிகள் பற்றிய அச்சம் நியாயமற்றது’ - மனதை வலுவாக வைத்திருக்க மனநல ஆலோசகர் அறிவுரை


மதுரை: உலகையே உலுக்கி உட்காரவைத்த கரோனா தொற்று மக்களின் வாழ்வில் பல மாற்றங்களை கொண்டு வந்தது. அந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் இந்த நோய்க்கு எதிராக போராட, பல்வேறு தடுப்பூசிகள் அவசரகால அனுமதியுடன் பயன்பாட்டில் வந்தன.

இந்தியாவில் முக்கியமாக கோவி ஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. சமீபத்திய ஆய்வுகளில் இந்த தடுப்பூசிகளை பெற்ற சிலருக்கு எதிர்விளைவுகள் அல்லது ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவிய வண்ணம் இருக்கிறது. இந்த செய்தி தடுப்பூசி போட்டவர்கள் மத்தியில் கவலையையும், அச்சத்தையும் உண்டாக்கியுள்ளது.

பெரும்பாலானவர்கள் கரோனா தடுப்பூசி போட்டநிலையில் சிலர், இந்த இடைப்பட்ட காலத்தில் இயல்பாக மாரடைப்பு உள்பட பல்வேறு நோய் காரணங்களால் உயிரிழந்தாலும், அது தடுப்பூசி போட்டதால் இருக்குமா என்ற கவலையையும் பொதுமக்களிடம் ஏற்படத் தொடங்கி உள்ளது. ஆனால், இந்த அச்சம் நியாயமற்றது என்றும், தடுப்பூசிகள் பெரும்பாலும் பாதுகாப்பானவை என்றும் மருத்துவ சமூகம் உறுதிப்படுத்துகிறது.

இதுகுறித்து மதுரை கே.கே.நகரை சேர்ந்த மனநல ஆலோசகர் ப.ராஜ சவுந்தர பாண்டியன் கூறியதாவது: ''மனம் தளராமல் இருப்பது இந்த நேரத்தில் மிக முக்கியம். மனதை வலுவாக வைத்துக்கொள்வது எப்போதும் நமது ஆரோக்கியத்திற்கு நல்லது. அச்சம் மற்றும் கவலைகள் நமது உடல்நலத்தையும், மனநலத்தையும் பாதிக்கும். எனவே, நாம் சிந்திக்க வேண்டியது நமது மனதின் வலிமையை பற்றியே. முதலில், நாம் அறிய வேண்டியது எந்தத் தடுப்பூசியும் சில சிறிய எதிர்விளைவுகளை உண்டாக்கலாம் என்பதையும், அவை பொதுவாக குறுகிய காலத்திற்கு மட்டுமே என்பதையும் ஆகும்.

இரண்டாவது, நாம் மருத்துவ நிபுணர்களின் அறிவுரைகளை பின்பற்றி, தேவைப்பட்டால் ஆய்வுகளை செய்து நமது ஆரோக்கியத்தை கவனிப்பது அவசியம். இதுவரை கோவிட் தடுப்பூசிகள்தான் கோடிக்கணக்கான மக்களை காப்பாற்றியுள்ளன. இந்த தடுப்பூசிகள் நோய்த்தொற்றுக்கு எதிரான நமது போராட்டத்தில் முக்கிய ஆயுதமாக அமைந்துள்ளன. அதனால், அச்சம் மற்றும் கவலைகளை கடந்து, நமது மனதை வலுவாக வைத்துக்கொள்வோம்.

இந்த சூழலில், மன உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டு, சரியான உடற்பயிற்சிகளை செய்யுங்கள். இது உங்கள் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும். தியானம், யோகா போன்றவைகளைச் செய்து மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள். இதனால் மன அழுத்தம் குறையும். ஒழுங்கான மற்றும் போதுமான நேரத்தில் தூங்குவது முக்கியம். நல்ல தூக்கம் உங்கள் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும்.

உங்கள் குடும்பம், நண்பர்கள் ஆகியோருடன் நேரத்தை செலவிடுங்கள். இது உங்களுக்கு மனநிம்மதியை அளிக்கும். ஏதேனும் உடல் நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள். இந்த பிரச்சினையை மீண்டும் மீண்டும் பேச வேண்டாம். உங்களுக்கு உடல் பதற்றம் இருந்தால், நல்ல மனநல ஆலோசகரை அல்லது சிகிச்சையாளரை சந்தியுங்கள்.

உண்மையான மற்றும் சரிபார்க்கப்பட்ட தகவல்களை மட்டுமே பகிருங்கள். தவறான தகவல்கள் அனைவருக்கும் பதற்றத்தை ஏற்படுத்தி, சிலருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். சமூக ஊடகங்களில் அதிகமாக ஈடுபடாமல், நம்மை பாதிக்கும் விஷயங்களை தவிருங்கள். தன்னிலை பார்வை மிக முக்கியம். நீங்கள் விரும்பும் பொழுதுபோக்குகளுக்காக நேரம் ஒதுக்குங்கள். இது உங்கள் மனதை புத்துணர்வடையச் செய்யும்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.