சென்னை - அண்ணாநகர் டவர் பூங்காவில் புத்தக அலமாரி!


பொது இடங்களில் மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் ஏடிஎம் இயந்திரம்போல சிறிய புத்தக அலமாரியை வைத்துள்ளனர். இந்த புதிய முயற்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ள போதிலும், விமர்சனத்தில் இருந்தும் தப்பவில்லை.

இந்நிலையில், பொதுமக்கள் மத்தியில் வாசிப்பை ஊக்கப்படுத்துவதில் தங்களது பங்கும் இருக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது சென்னை மாநகராட்சி. பொது இடங்களில் குறிப்பாக பூங்காக்களில் புத்தக வாசிப்புக்கு புதிய ஏற்பாடு செய்ய திட்டமிட்டது.

முதல் கட்டமாக சென்னை அண்ணாநகர் டவர் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் ஏடிஎம் இயந்திரம் போன்ற இயந்திரத்தை வைத்துள்ளனர். அதில், வாசிக்கலாமா - Let Us Read – சென்னை என எழுதப்பட்டுள்ளது. மேல் பகுதியில் சென்னை மாநகராட்சி முத்திரையுடன் அதன் எழுத்து வடிவமும் இடம்பெற்றுள்ளது.

அதில், புத்தகம் வைப்பதற்கான பகுதி புறாக்கூடு போல சிறியதாக இருக்கிறது. அதில், மகாகவி பாரதியார் கவிதைகள், பிஸ்மி பொதுக் கட்டுரைகள், ஸ்ரீமத் பகவத்கீதை (பொழிப்புரை), ஒளவையாரின் ஆத்திச்சூடி, விவேக தீபம் எனும் விவேகானந்தரைப் பற்றிய புத்தகம் என சில தமிழ் நூல்கள் மட்டும் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், ரமண மகரிஷி பற்றிய ஆங்கில நூல், MACMILLAN – The Merchant of Venice, The Path Of Perfection, His Trophy Mistress என்பன உள்ளிட்ட ஆங்கில புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து பூங்காவுக்கு வந்த பார்வையாளர்கள் சிலர் கூறியதாவது: புத்தக வாசிப்புக்கான இந்த புதிய ஏற்பாடு குறித்து சரிவர விளம்பரம் செய்யப்படாததால் மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கவில்லை. புதிதாக ஏதோ இங்கு இருக்கிறதே என யாராவது செக்யூரிட்டியிடம் விசாரித்தால் தான் அதுபற்றி தெரிய வரும். அவரிடம் தான் அந்த இரும்புப் பெட்டியின் சாவி இருக்கிறது. நாம் கேட்டுக் கொண்டால், அவர் பெட்டியை திறந்து காட்டுவார்.

பூங்காவுக்கு வருவோர் அதில் தங்களுக்குப் பிடித்த தமிழ் அல்லது ஆங்கிலப் புத்தகத்தை எடுத்து பூங்காவிலேயே அமர்ந்து படித்துவிட்டு அதை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

இந்த புதிய முயற்சியை இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் செய்திருக்கலாம். சிறிய அலமாரி போன்ற அந்த இரும்புப் பெட்டியில் கண்ணாடிக் கதவு இருந்தால் அனைவரது கவனத்தை ஈர்த்திருக்கும். புத்தகத்தை எடுத்துப் படிக்கும் ஆர்வமும் வரும்.

இதுபோன்ற முயற்சியை இனிமேல் பெரியளவில் செய்வதுடன், மற்ற பெரிய பூங்காக்களிலும், பிற பொதுஇடங்களிலும் செய்வதற்கு மாநகராட்சி ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

x