அன்று ரூ.1,200 சம்பளம்... இன்று ரூ.9,800 கோடிக்கு அதிபதி! தொழில்துறையில் சாதிக்கும் இளம்பெண்!


கஸல்

தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை நச்சு கலவாமல் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி தொழில் துறையில் அசைக்க முடியாத இடத்தை அடைந்திருக்கிறார் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர்.

ஹரியானா மாநிலத்தின் குர்கிராம் நகரைச் சேர்ந்த கஸல், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது பள்ளிப்படிப்பை ஹரியானாவில் படித்த கஸல், 2010-ம் ஆண்டு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கணினி துறையில் பட்டப்படிப்பு முடித்தார். நவீன ஓவியம் மற்றும் வடிவமைப்பு கலை பற்றிய படிப்பையும் நியூயார்க் அகாடமியில் 2013-ல் நிறைவு செய்தார்.

2008 முதல் 2010 வரை NIIT நிறுவனத்தில் கார்ப்பரேட் பயிற்றுனராக வேலை செய்த கஸல், பலருக்கும் கணினி மென்பொருள் மற்றும் நிரல்களை கற்றுக் கொடுத்தார். இந்த வேலைக்கு அவருக்கு கிடைத்த மாதச் சம்பளம் வெறும் ரூ.1,200 மட்டுமே. 2016-ம் ஆண்டு தனது கணவரோடு சேர்ந்து மாமா எர்த் (MamaEarth) என்ற நிறுவனத்தை தொடங்கினார். அந்த சமயத்தில் கஸல் கர்ப்பிணியாக வேறு இருந்தார்.

கஸல்

சுற்றுச்சூழல் மீது இவருக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக, சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இளம் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆரோக்கியம் சார்ந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்தார். இவரின் நிறுவனம் மறுசுழற்சி செய்யும் வகையிலான பேக்கேஜ் மற்றும் இயற்கை மூலப்பொருள்களை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தியது.

"இன்று சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான குழந்தை நலப் பொருட்களில் நச்சுப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. ஆகையால் எங்கள் குழந்தைகளுக்கு அமெரிக்காவிலிருந்து பொருட்களை வாங்கினோம். ஆனால் நீண்ட கால நோக்கில் இது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த நாங்கள் இந்த நிறுவனத்தை தொடங்கினோம்" எனக் கூறுகிறார் கஸல்.

முதலில் க்ரீம், லோஷன், ஷாம்பூ, மசாஜ் ஆயில், பாடி வாஷ், டயாப்பர் போன்ற ஆறு பொருட்களை இவர்கள் விற்பனை செய்தார்கள். இவை விலை குறைவாக இருப்பதோடு சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும் இவற்றில் எந்த நச்சுப்பொருளும் சேர்க்கப்படவில்லை. தற்போது ஆரோக்கியம், குழந்தைகளுக்கான அழகு சாதனப் பொருட்கள் என 500-க்கும் மேற்பட்ட பொருட்களை இவர்களது நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

ஆசியாவிலேயே பாதுகாப்பாக தயாரிக்கப்பட்டது (MADE-SAFE) என்ற சான்றிதழை பெற்ற ஒரே நிறுவனம் மாமா எர்த் மட்டுமே. கஸலும் அவரது கணவர் வருனும் இந்த தொழில் தொடங்க முதலில் ரூ.25 லட்சம் முதலீடு செய்தனர். அது இப்போது ரூ.9,800 கோடியாக பெருகியுள்ளது. தொடக்கத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே தங்கள் பொருட்களை விற்பனை செய்து வந்த மாமா எர்த், தற்போது சில்லறை வணிக கடைகள் மூலமாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

பட்டத்து இளவரசியாக முடிசூடினார் 18 வயது லியோனார்!

x