‘ஒரு மணி நேரம் தூக்கம் இழந்தால்...’ - மருத்துவரின் எக்ஸ் பதிவும், எதிர்வினையும்


பிரதிநிதித்துவப் படம்

சரியான தூக்கம் குறித்து மருத்துவர் ஒருவரின் சமூக வலைதள பதிவொன்று வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில், “1 மணி நேரம் தூக்கமின்மையினால் உண்டாகும் இழப்பு சரியாவதற்கு நான்கு நாட்கள் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றும் நரம்பியல் நிபுணர் சுதிர் குமார் தனது எக்ஸ் பக்கத்தில், "நீங்கள் உங்கள் தூக்கத்தில் ஒரு மணி நேரத்தை இழந்தால், அந்த இழப்பு சரியாவதற்கு நான்கு நாட்கள் எடுத்துக்கொள்ளும். தூக்கமின்மை, தலைவலி, கவனமின்மை, கவனச் சிதறல், எரிச்சல்படுதல், தவறாக தீர்மானித்தல், முடிவெடுத்தல், தூக்கம் தொலைத்தல் போன்ற பல்வேறு அறிகுறிகளை உண்டாக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை மாலை எழுதப்பட்டுள்ள இந்தப் பதிவினை இதுவரை 32,000 பேர் பார்த்துள்ளனர். சுமார் 400 பேர் பதிவினை விரும்பியுள்ளனர். அதேபோல் பல்வேறு நபர்கள் பதிவுக்கு தங்களின் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். பயனர் ஒருவர், "வயதுக்கு தக்கபடி ஒருவர் எவ்வளவு மணிநேரம் தூங்க வேண்டும்? பகல் - இரவு பணிக்குச் செல்லும் இளைஞர்கள் எப்படி தங்களின் தூக்கத்தை நிர்வகிப்பது?" எனக் கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள டாக்டர் சுதிர், வயது வாரியாக சராசரி தூக்கத்தின் அளவு என குறிப்பிட்டவை:

  • பிறந்த குழந்தைகள் (மூன்று மாதங்கள் வரை) - 14 முதல் 17 மணி நேரம்
  • பச்சிளம் குழந்தைகள் (4 - 12 மாதம்) 12 முதல் 16 மணி நேரம்
  • இளம் குழந்தைகள் (1 - 5 வயது) - 10 முதல் 14 மணி நேரம்
  • பள்ளிச் செல்லும் குழந்தைகள் (6 - 12 வயது) 9 முதல் 12 மணி நேரம்
  • வளர் இளம்பருவத்தினர் (13 - 18 வயது) 8 முதல் 10 மணி நேரம்
  • வயதுக்கு வந்தவர்கள் (18 வயதுக்கு மேல்) 7 முதல் 9 மணி நேரம்

மற்றொரு பயனர் "பகலில் தூங்குவதன் மூலம் இழந்த தூக்கமின்மையை ஈடுகட்ட முடியுமா?" என்று வினவியுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள மருத்துவர், "நிச்சயமாக, இரவு நேரத்தில் 7 - 9 மணி நேரங்கள் தூங்குவது சிறந்தது. என்றாலும், அப்படி தூங்க முடியாதவர்கள் தூக்கம் இழந்த நேரத்தை பகலில் உறங்கி ஈடுகட்டிக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.

மூன்றாவது பயனர் ஒருவர், "தூங்குவதற்கான அனைத்து வழிமுறைகளையும் கடைபிடித்த பின்பும் நான் ஒருநாளைக்கு பல மணி நேரங்கள் தூக்கத்தை இழக்கிறேன். தூங்குவதற்கான வழிமுறைகளை என்னால் கண்டறிய முடியவில்லை. ஆனாலும், இந்த 81 வயதில் நான் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு எனக்கு 5 மணி நேர தூக்கம் போதும் என நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், “தூக்கம் என்பது வாழ்க்கையின் அமிர்தம்" என்று தெரிவித்துள்ளார்.