விலை வீழ்ச்சியால் வெட்டி அழிக்கப்படும் தென்னை மரங்கள்...விவசாயிகள் கவலை!


தென்னை மரம்

விலை வீழ்ச்சி, நோய் தாக்குதல் போன்ற பல்வேறு காரணங்களால் தேனி மாவட்டத்தில் தென்னை மரங்கள் அதிகளவில் வெட்டி அழிக்கப்படுவது விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தென்னை மரங்கள்

தேனி மாவட்டம் கோம்பை, தேவாரம், கடமலைக்குண்டு, உத்தமபாளையம், கம்பம், பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 55 ஆயிரத்து 575 ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. 7-வது ஆண்டில் இருந்து தென்னை காய்ப்புத் தொடங்கும். ஒரு பாளைக்கு 10 காய்கள் வரை காய்க்கும். சுமார் 80 ஆண்டுகளுக்கு மேல் வரை தென்னைகள் பலன் தரும்.

பராமரிப்புக் குறைவு என்பதால் பலரும் இந்த விவசாயத்தில் ஆர்வம் காட்டினர். இங்கு விளையும் காய்கள் காங்கயம், திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன. உறித்த காய்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையானது. அதன்பின் இதன் விலை படிப்படியாகக் குறைந்து ரூ.18 வரை வந்துவிட்டது.

வெட்டப்பட்ட தென்னை மரங்கள்

இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். விலை வீழ்ச்சி மட்டுமல்லாமல் வாடல் உள்ளிட்ட பல்வேறு நோய்களும் தென்னையைத் தாக்குகின்றன. மேலும் காய் பறிப்புக் கூலி, வண்டி வாடகை ஆகியவையும் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் தேனி, கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் பலரும் தென்னந்தோப்புகளை வெட்டி அழித்து விட்டு மாற்றுப் பயிருக்கு மாறி வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாகவே காய் விலை வெகுவாக குறைந்து விட்டது. அதனால் தென்னையைக் கைவிடுகிறார்கள். இது மேலும் தொடராமல் இருக்க சிறப்புத் திட்டங்களை அரசு செயல்படுத்தி தென்னை விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோருகின்றனர்.

x