தை அமாவாசை மற்றும் விடுமுறை நாட்களையொட்டி 500 சிறப்புப் பேருந்துகள்...தமிழ்நாடு அரசு ஏற்பாடு!


அரசு பேருந்துகள்

தை அமாவாசை மற்றும் அதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

நாளை (பிப்.9) தை அமாவாசை தினம் என்பதால் ராமேஸ்வரத்துக்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனடிப்படையில் இன்று (பிப்.8) சென்னை கிளாம்பாக்கத்திலிருந்தும், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து ராமேஸ்வரத்துக்கும் மற்றும் நாளை (பிப்.9) ராமேஸ்வரத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வரும் 10, 11 (சனி, ஞாயிறு) தேதிகளில் முகூர்த்தம் மற்றும் வார கடைசி நாட்கள் என்பதால் வரும் 9-ம் தேதி (வெள்ளி) சென்னையிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் பிப்.9-ம் தேதி வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அன்றைய தினம் பெங்களூருவிலிருந்து பிற இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 500 பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 11,429 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் என்று போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x