நவீன யுகத்திலும் ‘தொடர்பற்று’ தனி தீவான ‘சொக்கன் அலை’ மலை கிராமம்!


சொக்கன் அலை மலை கிராமம்

பெரியகுளம்: பெரியகுளம் சோத்துப்பாறை அருகே அமைந்துள்ளது சொக்கன்அலை மலைகிராமம். இது போடி ஊராட்சி ஒன்றியம் அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி ஆகும். பட்டூர், படப்பம்பாறை, சுளுந்துக்காடு, அலங்காரம், மருதையூர் உள்ளிட்ட பல்வேறு உட்கடை கிராமங்கள் இங்கு உள்ளன.

காபி, எலுமிச்சை, மிளகு, இலவம், அவகோடா உள்ளிட்ட விவசாயம் நடந்து வருகிறது. பழங்குடியின மக்கள் இங்கு அதிகம் வசிக்கின்றனர். முறையான சாலை வசதி இல்லாததால் ‘தொடர்பற்ற கிராமமாகவே’ இந்த நவீன யுகத்திலும் ஒதுங்கி கிடக்கிறது. சோத்துப்பாறை அருகே கண்ணக்கரையில் இருந்து 2 கி.மீ. தூரம் மலைப்பகுதியிலே இக்கிராமத்துக்குச் செல்ல வேண்டும்.

பல ஆண்டுகால கோரிக்கைகளுக்குப் பிறகு 7 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணக் கரையில் இருந்து கருங்கல் பதித்து புதிய பாதை அமைக்கப்பட்டது. ஆனால் மேவப்பட்ட மண் தரமற்ற பணியால் மழையில் அடித்துச் செல்லப்பட்டது.

அதீத ஏற்றம், இறக்கம், கரடு முரடான கருங்கல் போன்றவற்றால் மோட்டார் சைக்கிளில்கூட இப்பாதையில் செல்ல முடியாது. போனும் எங்கோ ஓரிடத்தில், ஏதோ ஒரு நிறுவனத்தின் இணைப்புதான் கிடைக்கும். அதிலும் முழுமையாக பேசமுடியாதவாறு இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இக்கிராமத்தில் உள்ள 34 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் கட்டுமானப்பணி முழுமை அடையாமல் உள்ளது. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கும் மின் இணைப்பு இல்லை.

ஆசிரியர்கள் இங்கு வந்து செல்ல முடியாததால், இங்கு செயல்பட்ட அரசு பள்ளியும் மூடப்பட்டது. சாலை வசதி இல்லாததால் அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ இக்கிராமங்களுக்கு வருவ தில்லை. இதனால் இவர்கள் படும் சிரமம் வெளியில் தெரியாத நிலையே தொடர்கிறது.

கால்கள் இடறி விழும் அளவுக்கு கரடு முரடாக இருக்கும் கருங்கல் பாதை

போடி ஒன்றியத்தில் இருந்தாலும், போடி வட்டாட்சியர் அலுவலகம் செல்ல இவர்கள் பெரியகுளம், தேனி வழியே 30 கி.மீ.க்கு மேல் சுற்றியே அங்கு செல்ல முடியும். ஒரு மனு கொடுக்கக்கூட பல மணி நேர விரயம், கூடுதல் செலவு ஆகிறது.

ஆகவே இப்பகுதியை பெரியகுளம் ஒன்றியத்தில் இணைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். காட்டு மாடு, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் தொந்தரவு ஒருபுறம். மின்சாரம், சாலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதியின்மை மறுபுறம் என்று இவர்களின் வாழ்க்கை பல தலைமுறைகளாக சிரமத்தில் தொடர்கிறது.

சாலை வசதி இல்லாததால் இவர்களின் உறவினர்கள் கூட இவர்களை வந்து பார்க்க முடிவதில்லை. தொழில்நுட்ப வசதி பெருகிவிட்ட இக்காலத்தில் இவர்களது வாழ்க்கை முறை எதிர்திசையில் பயணித்து வருகிறது.

பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்படாமல் உள்ள வீடுகள்

இதுகுறித்து கிராமத் தலைவர் செல்வம் கூறுகையில், எங்கள் கிராமத்தில் 50 குடும்பத்தினர் இருக்கிறோம். பசுமை வீடுகள் கட்டுமானப் பணி முழுமை அடையவில்லை. போடப்பட்ட சாலையையும் மழை அரித்துச் சென்று விட்டது.

மின்சார வசதி இல்லை. குறைந்தபட்சம், இந்த சாலையை மட்டு மாவது போக்குவரத்துக்கு ஏற்றாற் போல அமைத்தால் போதும். இதன்மூலம் வெளியுலகத்துக்கு எங்களின் பரிதாப நிலை தெரிய வரும் என்றார்.

இக்கிராமங்களில் பல்வேறு பிரச்சினை இருந்தாலும் சாலை வசதி இன்றி தொடர்பற்ற கிராமமாகவே சுருங்கிக் கிடக்கிறது. ஆகவே இதர மக்களுடனும், மற்ற ஊர்களுடனும் இவர்களை ஒருங்கிணைக்க சாலையையாவது அமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

x