தமிழ், ஆங்கில எழுத்துக்களை பின்நோக்கி எழுதி சாதனை: அசத்தும் மதுரை பெண் மென்பொறியாளர்


மதுரை: தமிழ், ஆங்கில எழுத்துக்களை சரளமாக பின் நோக்கி எழுதி பெண் மென் பொறியாளர் சாதனை படைத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், கீழசெவல்பட்டிஅருகிலுள்ள சந்திரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விவசாயி முத்து மாணிக்கம் - ஈஸ்வரி தம்பதியர். இவர்களின் மூத்த மகள் அபிராமி (28). பொறியியல் பட்டதாரியான இவர், சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவருக்கு 5 வயது முதலே தமிழ், ஆங்கில எழுத்துக்களை பின்நோக்கி எழுதும் பழக்கத்தில் ஆர்வம் கொண்டு அதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டார். தற்போது, சரளமாக பின்னோக்கி(ரிவர்ஸ்) எழுதும் திறனை வளர்த்து கொண்டுள்ளார்.

தமிழ், ஆங்கில எழுத்துக்களை வேகமாகவும், சரளமாகவும் என்ன வார்த்தை கூறினாலும் அப்படியே தலைகீழாக எழுதுகிறார். இவரது பெற்றோரின் முயற்சியால் அபிராமியின் திறமையை வெளிப்படுத்தும் நோக்கில் மதுரை காமராஜபுரத்திலுள்ள டாக்டர் முத்துலட்சுமி மேல்நிலைப் பள்ளியில் ”சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்” என்ற அமைப்பு சார்பில், இந்த முயற்சி நடந்தது.

இதில் அபிராமி சுமார் 15 நிமிடத்தில் 106 தமிழ்ச் சொற்களையும், 115 ஆங்கில மொழிச் சொற் களையும் தனித்தனி 2 (ஏ4 ) தாள்களில் பின்னோக்கி துரிதமாக எழுதி பள்ளி மாணவர்கள் முன்பு தனது திறமையால் சாதனை படைத்தார். இதை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவன நடுவர்கள் உலக சாதனை யாக பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து சாதனை படைத்த அபிராமிக்கு பதக்கம், சான்றிதழும் வழங்கப்பட்டது.மேலும், பள்ளித் தாளாளர் ராதிகா ஆனந்த் வேலன், சோழன் உலகச் சாதனைப் புத்தக நிறுவன நிறுவனர் நீலமேகம் நிமலன், ஒருங்கிணைப்பாளர் பழனிக்குமார் உள்ளிட்டோர் அபிராமியை வாழ்த்தினர்.

அபிராமி கூறுகையில், "சிறுவயது முதல் தலைகீழாக பேசுவது, எழுவதுமான முயற்சியை எடுத்தேன். தொடர்ந்து பழகியதால் சுலபமாக வந்தது. பிறகு தலை கீழாக பாடல்களும் பாட முயற்சித்து, அதுவும் பாடுவேன். தற்போது, தான் சென்னையில் மென் பொறியாளராக இருக்கிறேன். இச்சூழலில் மதுரையில் எனக்காக சாதனை நிகழ்வு ஒன்றை ஏற்படுத்தி நடத்தினர். இதன்மூலம் எனது திறமையை வெளிப்படுத்தினேன். அது உலக சாதனைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது எனக்கு கிடைத்த பெருமை" என்று அபிராமி கூறினார்.

x