பொதுவுடமை தோழர் ஜீவானந்தத்தின் 117வது பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


தாம்பரத்தில் உள்ள ஜீவாவின் சிலைக்கு மாலை அணிவித்த மரியாதை செலுத்திய அரசியல் கட்சியினர் மற்றும் அவரது குடும்பத்தினர்.

தாம்பரம்: பொதுவுடமை சிற்பி ஜீவானந்தம் 117வது பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சி மற்றும் அவரது குடும்பத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பொதுவுடமை சிற்பி என்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரால் என்றும் அழைக்கப்படும் ஜீவா என்கின்ற ஜீவானந்தம் 1907ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார். இந்நிலையில் பொதுவுடமை வீரர் ஜீவாவின் 117வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் எ.ராஜ்குமார் தலைமையில் மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.ரவிந்திரநாத், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ப.கார்த்திக், மாவட்ட துணை செயலாளர்கள் வெ.வீராசாமி, ஏ.பாலாஜி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, கேவி. சேகுவேராதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதேபோல் ஜீவா நினைவுப் பேரவை சார்பில் அதன் தலைவர் தாம்பரம் ஆதிமாறன் மற்றும் செயலாளர் டி.எம்.ஜி. ஆனந்தன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. காங்கிரஸ் பேரியக்கத்தின் நகர தலைவர் ஜெ.பி.விஜய் ஆனந்த், திராவிடக் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் மோகன்ராஜ், ஜீவாவின் குடும்பத்தினர் ஜீவா மணிக்குமார், அருணாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இதேபோல் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஜீவானந்தம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுவாழ்வில் தூய்மை, எளிமையைக் கடைப்பிடித்த ஜீவானந்தம் தாம்பரத்தின் வளர்ச்சிக்கும், கல்லுடைக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்விக்காகவும் பாடுபட்டவர். இதனால் அவருக்கு தாம்பரத்தில் சிலை அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

x