திருப்பத்தூர் பரபரப்பு; வயலில் கிடைத்த பழங்கால பொருட்கள்... 3000 ஆண்டுகளுக்கு முந்தையதா?


கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள்

திருப்பத்தூர் அருகே வயலில் பள்ளம் தோண்டியபோது 3,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதப்படும் பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளது.

திருப்பத்தூரை அடுத்த கந்திலி தொப்பலகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சீனிவாசன். இவர் நேற்று தனது விவசாய நிலத்திற்கு பைப்லைன் போடுவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டினார். அப்போது ஓரிடத்தில் நிறைய பொருட்கள் தென்பட்டன.

அதையடுத்து அந்த இடத்தை பாதுகாப்பாக தோண்டிபோது சிறிய பானைகள் மற்றும் மண் கலயங்கள், மண் பாத்திரங்கள், கருப்பு மற்றும் சிவப்பு மண் பாத்திரங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து அவர் ஊராட்சி மன்ற தலைவர் மூலம் திருப்பத்தூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி தாசில்தார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்

மேலும், தொல்லியல் ஆய்வு செய்து வரும் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியரான ஏ.பிரபு சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். இங்கு காணப்படும் அனைத்து பொருட்களும் கற்காலத்தை சேர்ந்ததாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

கற்காலத்திலிருந்தே மனிதர்கள் தங்களின் உறவினர்கள் இறக்கும் தருவாயில் அவர்களை பானையில் வைத்து மண்ணுக்கு அடியில் புதைப்பதும், அப்போது அவர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களையும் அவர்களுடன் சேர்த்து புதைப்பதும் வழக்கம். அந்த வகையில் இந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கறுப்பு சிவப்பு மண் பாண்டங்களாக காணப்படுகிறது.

இதை வைத்துப் பார்க்கும்போது திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆரம்பகால வரலாற்றை உணர முடியும். இது ஏறத்தாழ மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்தியதாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். எனினும் தமிழக அரசின் தொல்லியல் துறை இந்த இடத்தில் முறையான அகழாய்வு நடத்தும்போதுதான் இதன் துல்லியமான காலம் உள்ளிட்ட வரலாற்று உண்மைகள் வெளிவர வாய்ப்பு உள்ளது.

x