மதுரை அருகே அபூர்வ அமைப்புடன் பாண்டியர் கால அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு!


மதுரை: மதுரை கூடக்கோவில் அருகே அபூர்வ அமைப்புடைய ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அய்யனார் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்கள் தர்மராஜா, தேன்மொழி, ஓம்பிரகாஷ், உதவி பேராசிரியர்கள் தாமரைக் கண்ணன், மாரீஸ்வரன், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கூடக்கோவிலிலுள்ள சிவன் கோயிலில் கள ஆய்வு செய்தனர். அப்போது அபூர்வமான, பழமையான முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்தது என்பதை கண்டறிந்தனர்.

இது குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியதாவது: "ஆரம்பத்தில் ஒவ்வொரு மதமும் பரவும்போது அதற்கேற்ற சிற்பங்கள் வடிக்கப்பட்டு வழிபடுவது நம் மரபாகும். அதுபோல ஆசீவகம் எனும் அய்யனார் வழிபாடும் தமிழகத்தில் பரவும்போது அய்யனாருக்கு சிற்பம் எடுத்து வழிபடும் வழக்கம் முன்னோர்களிடம் இருந்துள்ளது. நாளடைவில் ஆசீவகம் மெல்ல மறைந்து அய்யனார் வழிபாடானது.

ஊரின் காவல் தெய்வம் என்னும் கோட்பாட்டுக்குள் அடங்கியது. பெரும்பாலும் கிராமத்தில் அய்யனாருக்கு ஏரிக்கரை அல்லது கண்மாய்க் கரையில் சிற்பங்கள் அல்லது கோயில்கள் அமைக்கும் வழக்கம் இருந்துள்ளது. இங்குள்ள அய்யனார் சிற்பமானது மூன்றரை அடி உயரம், அகலம் இரண்டரையடி அகலத்துடன் உள்ளது. தலை மகுடம் விரிந்து அழகான ஜடா பாரமாகவும், காதுகள் இரண்டிலும் பத்திர குண்டலம், கழுத்தில் ஆபரணங்கள், மார்பில் முப்புரி நூல் காணப்படுகிறது.

வலது இடுப்பில் குறுவாள், யோகப்பட்டையானது இடுப்பில் இருந்து இடது காலை இணைக்கும் விதமாக வடிக்கப்பட்டுள்ளது. வலது காலை மடித்தும், இடது காலை உட்குதி ஆசனத்தில் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இடது கையை இடது முழங்காலின் மீது தொங்கவிட்டும், வலது கையில் திருவோடு / கபாலத்தை ஏந்தியபடியும் உள்ளது.

பொதுவாக பாசுபத சைவ மதத்தில் இதுபோல் இருந்தால் திருவோடு / கபாலம் என்றும், வைதீக மதத்தில் இதை அமிர்த கலசம் என்றும் குறிப்பிடுகின்றனர். இந்த அபூர்வ உருவ சிற்பம்போல், விருதுநகர் திருச்சுழி அருகே செந்நிலைகுடி (8-ம் நூற்றாண்டு), கொல்லிமலையில் உள்ளது. ஆனால் இங்குள்ள அய்யனார் சிற்பம் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்" என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறினார்.

x