வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் நாளை காவலர் பணி தேர்வு!


வேலூர்: இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கூடுதலாக தகுதி பெற்றவர்களுக்கான உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பாளர், சிறைக் காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித் தேர்வு, உடற்கூறு அளத்தல் மற்றும் சான்றிதழ் சரி பார்ப்புப் பணிகள் இந்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் தகுதி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடைபெற இருந்தது.

ஆனால், இரண்டாம் நிலை காவலர் தேர்வில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படாதது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தகுதியானவர்களுக்கு மீண்டும் உடல் தகுதித் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், (ஒன் இஸ்டூ ஃபைவ்) (One is to Five Ratio) 1:5 என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு வாரியாக அதிக மதிப்பெண் பெற்றவர்கள் கூடுதலாக தகுதி பெற்றவர்களுக்கான தேர்வு மாநிலம் முழுவதும் 6 மையங்களில் மீண்டும் உடல் தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதில், வடக்கு காவல் மண்டலத்துக்கு உட்பட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 1,202 பேருக்கு வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் நாளை (ஆக.20) முதல் இரண்டு கட்டங்களாக சான்றிதழ் சரி பார்ப்பு, உடற்கூறு அளத்தல் மற்றும் உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. இதன் முதல் கட்டத் தேர்வு நாளை (ஆக.20) காலை 6.30 மணிக்கு 350 விண்ணப்பதாரர்கள், காலை 8.30 மணிக்கு 250 விண்ணப்பதாரர்கள்,

புதன்கிழமை (ஆக.21) காலை 6.30 மணிக்கு 350 விண்ணப்பதாரர்கள், காலை 8.30 மணிக்கு 252 விண்ணப்பதாரர்கள் என மொத்தம் 1,202 பேருக்கு சான்றிதழ் சரி பார்ப்பு, உயரம், மார்பளவு அளத்தல், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற உள்ளது.

இதில், தகுதி பெறுபவர்களுக்கான இரண்டாம் கட்ட உடல் தகுதி தேர்வு வியாழக்கிழமை (ஆக.22) மற்றும் வெள்ளிக் கிழமை (ஆக.23) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதில், கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெறும். தேர்வில், கலந்துகொள்ள வரும் விண்ணப்பதாரர்களுக்கு முறைப்படி அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தேர்வில் பங்கேற்பவர்கள் அழைப்புக் கடிதத்துடன், அனைத்து அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். அழைப்புக் கடிதத்தில் புகைப்படம் இல்லாத விண்ணப்பதாரர்கள் புகைப் படத்தை உடன் எடுத்துவர வேண்டும். இந்த தேர்வுகளில் அரைக்கால் சட்டை, டி-சர்ட் அணிந்து பங்கேற்க விரும்பினால் ஒரே வண்ணம் கொண்ட அரைக்கால் சட்டை, எவ்வித எழுத்துகள், படங்கள் இல்லாத டி-சர்ட் அணிந்து வர வேண்டும்.

எந்த வித பயிற்சி மையத்தின் அடையாளமோ அல்லது சின்னமோ கொண்ட டி-சர்ட் அணிந்து வரும் பட்சத்தில் உடல் தகுதித் தேர்வில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்படும். தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் கைப்பேசி உள்ளிட்ட மின்னனு சாதனங்களை கொண்டு வரக்கூடாது. தவறாமல் தங்களது தலைமுடியை சீராக திருத்தம் செய்து வர வேண்டும் என வேலூர் மாவட்ட காவல் நிர்வாகம் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

x