பயன்பாட்டிற்கு வரும் முன்பே மணலால் மூடப்படும் தனுஷ்கோடி மரப்பாலம்: சுற்றுலாப் பயணிகள் கவலை!


தனுஷ்கோடியில் மணலால் மூடத் துவங்கியுள்ள மரப்பாலம்.

ராமேசுவரம்: தனுஷ்கோடி நினைவுச் சின்னங்களை பார்வையிட மரப்பலகையிலால் அமைக்கப்பட்டுள்ள பாலம், சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே மணலால் மூடத் துவங்கி உள்ளது.

22ம் தேதி டிசம்பர் 1964ல் தனுஷ்கோடியை தாக்கியப் புயலில், ரயில் நிலையம், துறைமுகக் கட்டிடங்கள், சுங்க நிலையம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமானது. அங்கிருந்த தேவாலயம் உள்ளிட்ட சில கட்டிடங்கள் இடிபாடுகளுடன் தப்பியது. ஆனால் பருவ காலங்களில் ஏற்படும் புயல், சூறைக்காற்று, மழையில் இந்த கட்டிடங்கள் தொடர்ந்து சேதம் அடையத் துவங்கின.

இதனால் 1964ம் ஆண்டு ஏற்பட்ட புயலின் தனுஷ்கோடியில் சேதமடைந்து இன்று சிதிலமாக காட்சித் தரும் பழமை வாய்ந்த கட்டடங்களை பராமரித்து பாதுகாத்திடும் வேண்டும் என ராமேசுவரம் வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் அந்த பகுதியில் வசிக்கும் மீனவர்களின் நீண்டக் கால கோரிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் தனுஷ்கோடி நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வசதியாக மரப் பலகையிலான பாலம் அமைக்கும் பணிகள் ராமேசுவரம் நகராட்சி சார்பாக ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் கடந்த மே மாதம் துவங்கியது.

6 அடி அகலம் 90 மீட்டர் நீளத்தில் கடற்கரை மணல் பரப்பிற்கு மேலே அமைக்கப்பட்ட மரப்பாலத்தின் மூலம் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இறங்கி மரப்பாலத்தில் நடந்து சுற்றுலாப் பயணிகள் நினைவுச் சின்னங்களை பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மரப்பாலம் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னதாகவே, தனுஷ்கோடி கடற்பகுதியில் வீசும் காற்றினால் மரப்பாலத்தை சுற்றி மணல் குவிந்து பாலத்தை மூடத்துவங்கி உள்ளது. மணல் குவியலை சரி செய்து, விரைவில் மரப்பாலத்தை பயன்பாட்டிற்கு திறந்த விடவேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x