7 கண்டங்களின் 7 சிகரங்களைத் தொடும் சிக்கிம் சிங்கப்பெண்... தென் அமெரிக்காவில் அடுத்த சாதனை!


மனிதா பிரதான்

உலகின் 7 கண்டங்களின் 7 சிகரங்களை குறிவைத்து மலையேறி சாதனை படைத்துவரும் மனிதா பிரதான், இம்முறை தென் அமெரிக்காவின் மிக உயரமான அகோன்காகுவா-வில் சாதனை படைத்திருக்கிறார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமை சேர்ந்தவர் மனிதா பிரதான். வட கிழக்கு மண்ணின் மைந்தர்களுக்கு எழும் விசித்தரமான ஆசைக்கு இவரும் விதிவிலக்கல்ல. சிறுவயது முதலே மலையேற்றம் பழகியவர், தற்போது உலகின் 7 கண்டங்களிலும் உள்ள 7 மிக உயரமான சிகரங்களில் ஏறி சாதனை படைத்து வருகிறார்.

மனிதா பிரதான்

இந்த வகையில் எவரெஸ்ட் (2021), எல்ப்ரஸ்(2022), கிளிமஞ்சாரோ(2022) ஆகியவற்றில் வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக நான்காவது இலக்காக தென் அமெரிக்காவின் அகோன்காகுவா-வில் நேற்று மலையேறி மனிதா பிரதான் சாதனை புரிந்திருக்கிறார். அடுத்து மிச்சமுள்ள வின்சன் மாசிஃப், தெனாலி மற்றும் கார்ஸ்டென்ஸ் பிரமிட் என 3 சிகரங்களுக்கு மனிதா குறி வைத்திருக்கிறார்.

அர்ஜென்டினாவின் ஆன்டிஸ் மலைத்தொடரில் உள்ள 6,962 மீட்டர் உயரமுள்ள அகோன்காகுவா சிகரத்தின் உச்சியை நேற்று அவர் வெற்றிகரமாக எட்டினார். இதனையடுத்து தனக்கு உறுதுணையாக நின்றவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அந்த அறிக்கையில், "7 கண்டங்களின் 7 சிகரங்களைத் தொடும் எனது முயற்சிகளுக்கு பக்கபலமாக நிற்கும் சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் மற்றும் சோரெங் தொகுதி எம்எல்ஏ ஆதித்யா கோலே தமாங் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று நெகிழ்ந்துள்ளார்.

மனிதா பிரதான்

இதையொட்டி ஆதித்யா கோலி தமாங்கும் தனது முகநூல் பதிவில் பிரதானை பாராட்டியுள்ளார். "வாழ்த்துகள் சகோதரி மனிதா பிரதான். நீங்கள் எங்களையும் உலகையும் தொடர்ந்து வியப்பில் ஆழ்த்தி வருகிறீர்கள்” என்று பாராட்டியுள்ளார். பெரும் சவாலும் கடும் உழைப்பையும் கோரக்கூடிய மலையேற்றத்தில் சாதனை படைப்பது என்ற தனது இளம் வயது கனவை, 38 வயதான பிறகும் திடமாக பிடித்துக்கொண்டு முன்னேறி வருகிறார் மனிதா பிரதான். மிச்சமிருக்கும் 3 சிகரங்களையும் அடுத்த 2 வருடங்களில் தொட்டுவிட வேண்டும் என்ற மனிதா பிரதானின் கனவு ஈடேறட்டும்!

இதையும் வாசிக்கலாமே...

x