தமுஎசக சங்க மண்டல பயிற்சி முகாம், கலை இலக்கிய இரவு @ ராமேசுவரம்


தமுஎசக சங்க மண்டல பயிற்சி முகாமில் உரையாற்றும் தமுஎசக பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா.

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் மண்டல பயிற்சி முகாம் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மண்டல பயிற்சி முகாம் ராமேசுவரத்தில் உள்ள அரங்கில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமிற்கு ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் நாறும்பூநாதன் பயிற்சி முகாமை துவக்கி வைத்து உரையாற்றினார்.

வரவேற்புக்கு குழுத் தலைவர் முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் கலையரசன், ஸ்டாலின், கிளை பொருளாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமேசுவரம் கிளைச் செயலாளர் மோகன் வரவேற்புரை ஆற்றினார். முதல் அமர்வு தக்கலை ஹலிமா தலைமையில் நடைபெற்றது. இதில் தமுஎசக பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா "பண்பாட்டு வெளியும் நமது பணிகளும்" என்கிற தலைப்பில் உரையாற்றினார்.

கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ஹசன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் வண்ணமுத்து தென்காசி மாவட்ட செயலாளர் பக்ருதீன் அலி அகமது, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் ஶ்ரீ ரசா, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் வான் தமிழ் இளம் பருதி ஆகியோர் தங்கள் மாவட்டங்களில் சமூக பண்பாட்டு நிலைமைகள் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து உரையாற்றினர்.

ராமேசுவரத்தில் நடைபெற்ற தமுஎசக சங்க மண்டல பயிற்சி முகாம்.

இரண்டாவது அமர்வு மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைப் பொதுச்செயலாளர் கே .வேலாயுதம், "அமைப்பு உள்ள அடக்கமும் உருவமும்" என்கிற தலைப்பில் உரையாற்றினார். பயிலரங்கத்தை மண்டல பொறுப்பாளர் வெண்புறா, மாவட்ட பொறுப்பாளர் கரிசல் கருணாநிதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

ஞாயிற்றுக்கிமை (இன்று) மாலை 6 மணியளவில் ராமேசுவரம் பொந்தம்புளி பேருந்து நிலையம் அருகே ஓவியர் மோகன்தாஸ் நினைவு மேடையில் தமுஎசகவின் கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி துவங்குகிறது. நிகழ்ச்சிக்கு தமுஎசகவின் ராமேசுவரம் கிளைத் தலைவர் ராமச்சந்திரபாபு தலைமை வகிக்கிறார். கிளைச் செயலாளர் மோகன் வரவேற்பு உரையாற்றுகிறார்.

நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட எழுத்தாளர்களான நசிமா மரைக்கயார், பாலபாரதி, கலையரசன், குமரன்தாஸ், வா.ஸ்டாலின், மேகவண்ணன், மோகனப்பிரியா ஆகியோருக்கு பாராட்டு, விருதுகள் வழங்கப்படுகின்றன. திண்டுக்கல் சக்தி போர்ப்பறை, புதுகை பூபாளம் கலைக் குழு, முகவை அலைகள் இசைக்குழு, முகவை கலைக்குழுகளின் இசை நிகழ்ச்சிகளும், வேல.ராமமூர்த்தி, வள்ளிபாலா, முகவை அழகுடையான், அலைகள் ராஜ்குமார், ஹலோ கந்தசாமி, நந்தலாலா, சாத்தூர் லெட்சுமணப் பெருமாள் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

x