நீங்க மென்சுரல் கப் பயன்படுத்துறீங்களா... கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க!


பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று மாதவிடாய் பிரச்சினை. மாதவிடாயின் போது பெண்கள் வலியை அனுபவித்தாலும், இந்த மாதவிடாய் தான் அவர்களுக்கு தாய்மையும்,பெண்மையும் கொடுக்கிறது.

முந்தைய காலத்தில் மாதவிடாய் ஏற்படும் போது பெண்கள் துணியை மட்டுமே பயன்படுத்தினர். ஆனால் தற்பொழுது பல்வேறு வகையான நாப்கின்கள், காட்டன்கள், டாம்பூன்ஸ்கள் வந்துவிட்டுன. இவை அனைத்தும் ரத்தத்தை உறுஞ்சி தக்க வைத்துக் கொள்ளக்கூடியது. இதில் பெரும்பாலும் நாப்கின்களையே பலரும் தேர்வு செய்கின்றனர். இந்த நாப்கின்களால் மட்டுமே இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 9 ஆயிரம் டன் நெகிழி குப்பைகள் உருவாகின்றன.

நகரங்களில் 77% பெண்களும், கிராமங்களில் 47% பெண்களும் தற்போது ஒற்றை பயன்பாட்டு மாதவிடாய் தயாரிப்புகளை பயன்படுத்த பழகிவிட்டனர். சிலர் மென்சுரல் கப்களையும் பயன்படுத்தி வருகின்றனர். நாப்கின்கள் போன்று மென்சுரல் கப்கள் சுற்றுச்சூழலை பாதிப்பதில்லை. இவற்றின் விலையும் குறைவு.

மென்சுரல்க்கு கப்பின் பல்வேறு அளவுகள்

நாப்கின்களைப் போல் ரத்தத்தை உறிஞ்சாமல் மென்சுரல் கப்கள் ரத்தத்தை சேகரிக்கின்றன. இதனால் அதனை பாதுகாப்பாக வெளியேற்ற முடிகிறது. பாக்டீரியா தொற்று, நச்சு தொற்று போன்றவற்றில் இருந்து தப்பிக்கவும் முடிகிறது. மென்சுரல் கப்பை பயணத்தின் போதும், உடலுறவின் போதும் பெண்கள் எளிதாக பயன்படுத்த முடியும்.

ஒருமுறை வாங்கும் மென்சுரல் கப்களை முறையாகச் சுத்தப்படுத்தி பயன்படுத்தினால் 10 வருடங்களுக்குக்கூட பயன்படுத்த முடியும் என்பது இன்னொரு வரப்பிரசாதம். இதனை பொருத்திக் கொள்வதும் எளிது. யோனிக்குள் இரண்டாக மடித்து உள்ளே செலுத்தி பின் அதனை விடுவிக்கும் போது பாராசூட் போன்று விரிவடையும் பின் அதனை சரியாக சுழற்றினால் பொருந்திவிடும்.

அதேபோல வெளியேற்றும் போதும் ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுத்தால் தானாக வந்து விடும்.

மென்சுரல் கப் வைக்கும் முறை

தனது ரத்தப் போக்கின் அளவுக்கு ஏற்ப இந்த கப் கிடைக்கிறது. இதனை ஒவ்வொரு முறையும் கொதிக்கும் தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து மறுமுறை உபயோகிக்க வேண்டும். நாப்கின்கள் கூட இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றிவிட வேண்டும். ஆனால் இதனை 8 மணி நேரம் வரை அச்சப்படாமல் வைத்துக் கொள்ளலாம்.

தற்போது, அலர்ஜி ஏற்படாத சிலிக்கான் கப்களும் மார்க்கெட்டில் கிடைக்கிறது. 150 முதல் 1,500 ரூபாய் விலையில் கிடைக்கும் இந்த கப் பயன்படுத்த வசதியாகவும், துர்நாற்றம் இல்லாமலும் நீண்ட நாட்களுக்கு உபயோகப்படுத்தக் கூடிய ஒன்றாகவும் உள்ளது.

மென்சுரல் கப்களில் இத்தனை வசதிகள் இருந்தாலும் இவற்றைப் பயன்படுத்துவோர் இதில் உள்ள சில தீமைகளையும் தெரிந்து கொள்வது நல்லது. மென்சுரல் கப்பை தூய்மையாக பயன்படுத்தாவிட்டால் அலர்ஜி என்கிற ஒவ்வாமை ஏற்படும். அதேபோல இந்த கப்பை சரியாக பொருத்தாவிட்டால் நடக்கவோ, உட்காரவோ சிரமமாக இருக்கும்.

மென்சுரல் கப்பை பயன்படுத்துவதற்கு பொறுமை மிகவும் அவசியம். இதனை செருகும் போதும், அகற்றும் போதும் வலுக்கட்டாயமாக இல்லாமல் நிதானமாக செய்வது அவசியம் குறிப்பாக, விரல்களில் நகங்கள் கூராக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுகப்பிரசவமான தாய்மார்களைத் தவிர மற்றவர்களுக்கு இந்த கோப்பையை பயன்படுத்தும் போது அசவுகரியகள் ஏற்படும்.

முதல் முறை பயன்படுத்துபவர்களுக்கு அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படலாம். இதனைப் பற்றிய விழிப்புணர்வை பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும். அனைத்து விதத்திலும் சௌகரியமாக இருந்தாலும், மென்சுரல் கப்களை பயன்படுத்தும் முன்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

x