தேனிலவுக்கு கோவா ஆசை காட்டி அயோத்திக்கு அழைத்துச் சென்ற கணவன்; விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார் மனைவி


கோவா - அயோத்தி

தேனிலவுப் பயணமாக கோவா அழைத்து செல்வதாகக் கூறி அயோத்தி மற்றும் காசிக்கு அழைத்துச் சென்றதால் கடுப்பான மனைவி, கணவனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த இளம் தம்பதி தற்போது குடும்ப நல நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி வருகிறார்கள். திருமணமாகி 5 மாதங்களேயான இந்த தம்பதி இடையே வெடித்த விசித்திர பிரச்சினையில், விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள். ஆமாம் காரணம் சற்று விசித்திரமானதுதான்.

விவாகரத்து வழக்கு

திருமணமானது முதலே தேனிலவுப் பயணமாக வெளிநாடு செல்லலாம் என மனைவிக்கு கணவன் ஆசை வார்த்தைகளில் உறுதிமொழி அளித்திருக்கிறார். தேனிலவுக்கு வெளிநாடு பறக்குமளவுக்கு இருவருமே நல்ல பொருளாதார பின்புலத்தோடும், பணியிலும் இருக்கிறார்கள். ஆனபோதும் நாட்கள் தள்ளிப்போனதே தவிர்த்து, கணவன் வெளிநாடு ஹனிமூன் பயணம் குறித்து வாய் திறப்பதாக தெரியவில்லை. மனைவி வெகுவாய் நெருக்கிய பிறகே கணவன் உண்மையை உடைத்திருக்கிறார்.

வயதான பெற்றோர்கள் வீட்டில் இருப்பதால் அவர்களை தனியே விட்டு வெளிநாட்டுக்கு ஹனிமூன் பயணம் மேற்கொள்வதில் இருக்கும் தயக்கங்களை அந்த கணவன் எடுத்துச் சொல்லியிருக்கிறார். கணவன் சொன்னதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த மனைவி, இறங்கி வந்திருக்கிறார். வெளிநாடு வேண்டாம்; உள்நாட்டில் கோவா வரையிலேனும் தேனிலவுக்கு சென்று வரலாமே என்று கேட்டிருக்கிறார். கணவரும் சம்மதித்து, பயண ஏற்பாடுகளில் இறங்கியிருக்கிறார்.

கோவா - அயோத்தி

ஆனால் பயணத்துக்கான கடைசி நேரத்தில், நாம் செல்லப்போவது கோவா அல்ல; அயோத்தி மற்றும் வாராணசிக்கு என கணவர் தெரிவித்திருக்கிறார். மனைவி ஏமாற்றமாக உணர்ந்தாலும், கணவருடன் அமைதியாக அயோத்தி, வாராணசி என புனிதப் பயணத்தை முடித்திருக்கிறார். ஆனால் ஊர் திரும்பிய பிறகும் அந்த மனைவியால் ஏமாற்றத்தை தாங்க முடியவில்லை. கணவரை விட்டுப் பிரிந்ததோடு, விவாகரத்து கோரி போபால் குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். வழக்கை விசாரித்த நீதிபதி, இருவருக்கும் திருமணமாகி 6 மாதம் கூட நிறைவடையவில்லை என்பதாலும், விவாகரத்துக்கான காரணம் விசித்திரமாக இருந்ததாலும், தம்பதியரை முதல் கட்டமாக கவுன்சிலிங் செல்லுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

x