பழநி: விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வருவதால் பழநியில் வடமாநிலத்தவர்கள் பலவிதமான விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
ஆண்டுதோறும் தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, பொது இடங்கள், கோயில்களின் முன் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம். பின் ஊர்வலமாகக் கொண்டு சென்று, ஆறு, குளங்களில் விஜர்சனம் செய்வர். இதனையொட்டி ஆண்டுதோறும் பழநியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு செப். 7-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பழநியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியில் குஜராத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர். எளிதில் கரையக்கூடிய பேப்பர் கூழ், கிழங்கு மாவு போன்ற மூலப் பொருட்களை கொண்டு சிலைகள் தயாரிக்கின்றனர். 1 அடி முதல் 5 அடி வரை பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு சிலை ரூ.200 முதல் ரூ.5,000 வரையில் விற்கப்படுகிறது.
இது குறித்து சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறியதாவது: இன்னும் சில வாரங்களே இருப்பதால் இரவு, பகல் பாராமல் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சொந்த ஊரில் இருந்து குடும்பத்தோடு தமிழகத்துக்கு வந்து விடுவோம். இங்கு வந்து 3 மாதங்கள் தங்கியிருந்து விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபடுவோம். வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப பல்வேறு வடிவங்களில், வண்ணங்களில் விநாயகர் சிலைகளை தயாரிக்கிறோம்.
சிறு வியாபாரிகள் எங்களிடம் மொத்தமாக ஆர்டர் கொடுத்து வாங்கிச் சென்று விற்பனை செய்கின்றனர். இங்கிருந்து வெளியூர்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகிறோம். மூலப்பொருட்கள் விலை உயர்வால் சிலைகள் விலை உயர்ந்துள்ளது. இருப்பினும் விநாயகர் சிலை தயாரிப்பு ஆர்டர் எங்களுக்கு குறையவில்லை என்று கூறினர்.