குற்றாலத்தில் தொடங்கியது சாரல் விழா: கண்களைக் கவரும் மலர் கண்காட்சி!


தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடப்பாண்டுக்கான சாரல் விழாவை இன்று மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தொடங்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழை பெய்யும். இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். சாரல் சீஸன் காலத்தில் குற்றாலத்தில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் சாரல் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சாரல் விழா இன்று தொடங்கியது. வருகிற 19ம் தேதி வரை 4 நாட்கள் சாரல் விழா நடைபெறுகிறது.

விழாவையொட்டி ஐந்தருவி அருகே உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் மலர் கண்காட்சி இன்று தொடங்கி 18ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. மலர் கண்காட்சியை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து குற்றாலம் கலைவாணர் அரங்கில் சாரல் விழாவை ஆட்சியர் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு தென்காசி தொகுதி எம்பி டாக்டர் ராணி ஸ்ரீகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பழனி நாடார், சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பேசிய ஆட்சியர் கூறியதாவது: "சாரல் திருவிழா தென்காசி மாவட்டத்தில் ஒரு முக்கிய பெருவிழா. பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக I LOVE COURTALLAM Selfie point குற்றாலம் பிரதான அருவி அருகே அமைக்கப்பட்டுள்ளது" என்று ஆட்சியர் கூறினார்.

விழாவில் தென்காசி தொகுதி எம்பி டாக்டர் ராணி ஸ்ரீகுமார் பேசும்போது, "குற்றாலம் இயற்கை எழில் சூழ்ந்த இடம். இங்கு பல்வேறு அருவிகள் நிறைந்து காணப்படுகின்றன. இங்கு வரும் மக்கள் சந்தோசமாகவும், மன நிம்மதியுடன் குற்றாலச்சாரலை அனுபவித்து செல்கின்றனர்" என்று எம்பி டாகடர் ராணி கூறினார்.

மங்கல இசையுடன் விழா தொடங்கியது. முதல் நாளில் கொழு கொழு குழந்தைகள் போட்டி, மாணவ, மாணவியர்களின் பல்சுவை நிகழ்ச்சி, ஜிக்காட்டம் நிகழ்ச்சி, பரதநாட்டியம், கலைநிகழ்ச்சி, கிளாரினட் இசை நிகழ்ச்சி, பட்டிமன்றம், திரைப்பட மெல்லிசை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் குடும்ப வன்முறை, குழந்தைத் திருமணம், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த காணொளி காட்சி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கொழு, கொழு குழந்தைகள் போட்டியில் 62 குழந்தைகள் போட்டியில் பங்கேற்றனர். 9 முதல் 12 மாத குழந்தைகளின் எடை ,உயரம் ஊட்டச்சத்து நிலை, வளர்ச்சி படிநிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

விழாவில் மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோனி பெர்னாண்டோ, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமிர்தலிங்கம், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சுற்றுச்சூழல் பூங்காவில் நடைபெற்ற மலர் கண்காட்சியில் மா, பலா, வாழை, அன்னாசி, எலுமிச்சை, ஆப்பிள், செவ்வாழை, ஆரஞ்சு, மாதுளை ஆகியவற்றைக் கொண்டு பார்வையாளர்களை வரவேற்கும் வகையில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தது.

கிருஷ்ணகிரி, ஓசூர், கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் இருந்து பெறப்பட்ட வண்ண மலர்களான ரோஜா, கார்நேசன், சம்மங்கி, துளிப், அந்தூறியும், ஜின்ஜெர் லில்லி, செவ்வந்தி, ஹெலிகோனியா, ஆர்க்கிட்ஸ் , Bird of paradise போன்ற மலர்களை பயன்படுத்தி 8 அடி உயரமும் 6 அடி அகலமும் கொண்ட அழகிய பட்டாம் பூச்சி வடிவம், குழந்தைகளைக் கவரும் கார்ட்டூன் டாம் அண்ட் ஜெர்ரி வடிவம், 7 அடி உயரத்திலும் 3 அடி அகலத்திலும் பார்பி பொம்மை வடிவங்கள் மற்றும் எழில் மிகு மலர்களால் ஆன மலர் அலங்காரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

கேரட், முள்ளங்கி, கத்தரி, வாழைப்பூ போன்ற காய்கறிகளால் திருவள்ளுவர் உருவம் 7 அடி உயரம் 3 அடி அகலத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. மிளகாய், மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், கடுகு, கசகசா, மல்லி, ஜாதிபத்திரி, ஏலக்காய், இலவங்கப்பட்டை, அன்னாசிப்பூ, மராட்டி மொக்கு ஆகிய 14 வாசனை மற்றும் நறுமணப் பொருட்களால் திருவள்ளுவர் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. சேனைக்கிழங்கு, பூசணிக்காய், குடை மிளகாய், வாழைப் பூ, கேரட் போன்ற காய் கறிகளை கொண்டு 12 அடி நீளமும் 3 அடிஅகலமும் கொண்ட டிராகன் மற்றும் அழகிய வண்ணமயில் உருவம் அமைக்கப்படிருந்தன.

தென்காசி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் பல வகையான பழ ரகங்கள், காய்கறிகள், வாசனைப் பயிர்கள் மற்றும் மலர் வகைகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. நவீன தோட்டக்கலைத் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் வகையில் மண்ணில்லா விவசாயம் மற்றும் செங்குத்து தோட்டம் ஆகியவற்றின் மாதிரி அமைப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி குறித்த முகாம் நடைபெற்றது.

நாளை சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக்கலை பயிர்களில் இயற்கை பண்ணையம், ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி குறித்த கருத்தரங்கு, இயற்கை பண்ணைய இடுபொருட்கள் தயாரிப்பு முறைகள் குறித்த செயல்விளக்கம், குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, சதுரங்கம், வாலிபால் போட்டிகள், ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணெய்மடை படகு குழாமில் படகு போட்டி, கலைவாணர் அரங்கத்தில் நாய்கள் கண்காட்சி, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், பரதநாட்டியம், கிராமிய கலைநிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

x