செங்கோட்டை மக்களுக்கு குட்நியூஸ்... ஈரோடு - நெல்லை தினசரி விரைவு ரயில் சேவை நீட்டிப்பு!


ரயில்.

ஈரோடு - நெல்லை எக்ஸ்பிரஸ் தினசரி விரைவு ரயில் நாளை முதல் செங்கோட்டை வரை இயக்கப்படும் என தெற்கு ரயில் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலை அம்பாசமுத்திரம் வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும், இதனால் மதுரை மற்றும் மேற்கு தமிழகத்திற்கு ரயில் இணைப்பு கிடைக்கும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இது தொடர்பாக அம்பாசமுத்திரம் பகுதி ரயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் ஈரோடு, நெல்லை ரயிலை செங்கோட்டை வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட ரயில் சேவை நாளை முதல் செயல்பாட்டிற்கு வருகிறது. இந்த சேவையை மத்திய இணைய அமைச்சர் எல். முருகன் ஈரோட்டில் நாளை தொடக்கி வைக்கிறார்.

ரயில்.

முன்னதாக, மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவை அனைத்தும் சிவகாசி வழியாக செல்கின்றன. இந்நிலையில், ரயில் எண். 16845 ஈரோடு - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் வழக்கமாக ஈரோட்டில் இருந்து மதியம் 1.35 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில் நாளை முதல் ஈரோட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.55 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். அங்கிருந்து இரவு 10.12 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

மறுமார்க்கமாக, ரயில் எண் 16846 திருநெல்வேலி - ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் 25ம் தேதி முதல் காலை 5 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு, திருநெல்வேலிக்கு செல்லும். அங்கிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு ஈரோடு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த ரயில் நெல்லையில் காலை 6.15க்கு புறப்பட்டு, பிற்பகல் 2.30 மணிக்கு ஈரோட்டை சென்றடையும்.

செங்கோட்டை ரயில் நிலையம்

இந்த ரயில் அம்பாசமுத்திரம், கடையம், பாவூர்சத்திரம், சேரன்மாதேவி வழியாக செங்கோட்டை ரயில் நிலையம் சென்றடையும். இந்த ரயில் சேவையை செங்கோட்டைக்கு நீட்டிப்பதன் மூலம், திருநெல்வேலி சந்திப்பின் நெரிசலைக் குறைக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், அம்பாசமுத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் திருநெல்வேலியில் இருந்து தாதருக்கு இணைப்பு ரயில்கள் மற்றும் நீண்ட தூரம் செல்லும் ரயில்களைப் பெறவும் இந்த ரயில் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


வசீகரிக்கும் வீடியோ... ஏஐ தொழில்நுட்பத்தில் கண் சிமிட்டி, புன்னகைக்கும் அயோத்தி ராமர்!

x