தாரை, தப்பட்டையுடன் பாட்டியை ஊர்வலமாக அழைத்து சென்று தேசியக் கொடி ஏற்றவைத்த குமரி இளைஞர்கள்!


நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் திருத்துவபுரத்தில் சுதந்திர தினத்தில் ஊரின் வயது மூத்த 95 வயது பாட்டியை தாரைதப்பட்டை முழங்க ஊர்வலமாக அழைத்து சென்ற இளைஞர்கள், அவரை தேசியக் கொடி ஏற்றவைத்து கவுரவப்படுத்தினர்.

78-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இன்று அனைத்து தரப்பினரும் தேசிய கொடியேற்றி மரியாதை செய்தனர். பள்ளி, கல்லூரிகள், அரசு, மற்றும் தனியார் நிறுவனங்கள், அரசியல் கட்சியினர், பொதுநல ஆர்வலர்கள் என பலதரப்பட்ட மக்களும் தேசியக்கொடியை ஏற்றி இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியில் அதே கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து 95 வயது பாட்டிக்கு மரியாதை செய்து தேசிய கொடியேற்ற வைத்த சம்பவம் மாவட்டம் முழுவதும் வைரலானது. பொதுவாக அரசியல் பிரமுகர்கள், ஊர் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்களை வைத்து தேசிய கொடியை ஏற்றுவது வழக்கம்.

ஆனால் திருத்துவபுரம் ஊரில் மூத்தவராக இருந்த பார்வதி என்ற 95 வயது மூதாட்டியை வைத்து தேசிய கொடியை ஏற்ற அங்குள்ள இளைஞர்கள் முடிவு செய்தனர். இதனால் இன்று காலை பார்வதி பாட்டியை அவரது வீட்டில் இருந்து செண்டை மேளம் முழங்க கையில் தேசிய கொடியை கொடுத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

சாரல் மழைக்கு மத்தியில் சாலையோரம் கூனிய முதுகுடன் குனிந்தவாறு நடந்து வந்த பாட்டிக்கு இளைஞர்கள் குடைபிடிக்க, அதன் முன்னால் தாரை, தப்பட்டையை அடித்து அமர்களப்படுத்தியவாறு பல இளைஞர்கள் சென்றனர். பின்னர் திருத்துவபுரம் சந்திப்பில் உள்ள கொடிக்கம்பத்தில் பார்வதி பாட்டி தேசிய கொடியை ஏற்றினார்.

அப்போது அங்கு நின்று இளைஞர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வந்தே பாரதம் என என முழக்கமிட்டனர். சுதந்திர தின விழாவில் மூதாட்டியை கொடியேற்ற வைத்து கவுரவித்த செயல் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

இதுகுறித்து பார்வதி பாட்டியை கொடியேற்ற வைத்த இளைஞர்கள் கூறுகையில்; பதவி, அந்தஸ்து எல்லாம் நிரந்தரமில்லை. அவ்வாறு இருப்பவர்கள் ஊரின்தேசிய கொடியை ஏற்ற வைப்பதைவிட ஊரின் பெரியவரை வைத்து கொடியேற்ற வேண்டும் என நினைத்தோம். எங்கள் ஊரில் பார்வதி பாட்டி தான் மூத்தவர். 95 வயதான அவர் கொடியேற்றியதால் அனைவருக்கும் மகிழ்ச்சி. முதுமை அனைவருக்கும் வருவது தான். இதை அனைத்து நகர, கிராம பகுதிகளிலும் பின்பற்ற வேண்டும் என்பது எங்கள் எண்ணம். அதற்கு முன்னுதாரணமாக இதை செய்தோம்” என்றனர்.

x