கேத்ரின் நீர்வீழ்ச்சியின் கண்கொள்ளா காட்சி... ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்... அத்துமீறும் சுற்றுலாப் பயணிகள்


குன்னூர் அருகே உள்ள கேத்ரின் நீர்வீழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கேத்ரின் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இதனிடையே வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரிக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். குன்னூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், கேத்ரின் நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்க விரும்புகின்றனர். சுமார் 100 அடி உயரத்தில் இருந்து கொட்டும் தண்ணீரை, காட்சி முனையில் இருந்து காண வனத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கேத்ரின் நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

குன்னூர் அருகே உள்ள கேத்ரின் நீர்வீழ்ச்சி

நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்று பார்க்க வனத்துறை தடை விதித்துள்ள போதும், சில சுற்றுலாப் பயணிகள் தடையை மீறி தனியார் தேயிலை தோட்டம் வழியாக ஆபத்தான நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்று வருகின்றனர். நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியில் ஆபத்தை உணராமல் சிலர் குளிப்பதால், அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் (கோப்பு படம்)

இதையும் வாசிக்கலாமே...

அமைச்சர் அன்பில் மகேஷை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆவேசம்!

சிவப்பு நிறத்தில் மாறிய கடல்... செல்ஃபி எடுக்க குவிந்த மக்கள்

x