ராமர் கோயிலுக்காக விடுமுறை; நாளை அறுவை சிகிச்சைகள் நடக்குமா? - நீதிமன்றத்தில் ஜிப்மர் விளக்கம்!


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை

ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாளை ஜிப்மர் மருத்துவமனைக்கு மதியம் 2:30 மணி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதில் தடை ஏற்படாது என மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

உத்தரபிரேதச மாநிலம் அயோத்தியில், நாளை ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறுவதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் பல்வேறு மாநிலங்களில் அரசு சார்பில் முழு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை, புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை ஆகியவற்றிற்கு நாளை மதியம் 2.30 மணி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை

இதில், எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை, ரத்து செய்யப்படுவதாக சற்று முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவமனைக்கு விடப்பட்டிருந்த விடுமுறையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நாளை அறுவை சிகிச்சைகள் நடைபெறுமா? அறுவை சிகிச்சைகள் செய்ய நேரம் வழங்கப்பட்டது மாற்றப்படுமா? என்பது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு கேள்வி எழுப்பியிருந்தது.

சென்னை உயர்நீதிமன்றம்

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அறுவை சிகிச்சை, அவசர சிகிச்சை, மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் எந்த தடையும் இல்லாமல் செயல்படும் என உத்தரவாதம் அளித்தார். மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை தொடர்ந்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

x