குட் நியூஸ்... கூடுதலாக 5,041 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை!


மகளிர் உரிமைத் தொகை

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அக்டோபர் மாதத்தில் கூடுதலாக 5,041 பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் 27.03.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000/- உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது.

தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு மக்கள் நலத்திட்டமும், தேவையுள்ள ஒருவர்கூட விடுபடாமல் தகுதியான பயனாளிகளைச் சென்றுசேர வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு அதிக அக்கறையுடன் செயல்பட்டுவருகிறது. அதுபோலவே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கும் தகுதியான பயனாளிகளைக் கண்டறிவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 1000/- வீதம் முதல் தவணையாக மொத்தம் ரூபாய் 10,65,21,98,000/- அவர்களின் வங்கிக் கணக்கின் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்

இத்தனை பயனாளிகளுக்கு ஒரே நேரத்தில் வங்கிக் கணக்கில் அரசின் நலத்திட்ட நிதி வரவு வைக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். நடப்பு அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட வேண்டிய அக்டோபர் 15, அரசு விடுமுறை நாள் என்பதால், இத்திட்டத்தின் கீழ் பயனடையும் அனைத்து மகளிருக்கும், ஒரு நாள் முன்னதாகவே உரிமைத் தொகையினை அனுப்பி வைக்கத் தாயுள்ளத்தோடு முதல்-அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதியான பயனாளி ஒருவர்கூட விடுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கில், திருநங்கைகள் உள்ளிட்ட பல்வேறு தகுதியான குடும்ப தலைவியர் கண்டறியப்பட்டு, அக்டோபர் மாதத்திற்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உரிமைத்தொகை பெற்றுக்கொண்டவர்களில் இறந்துபோனவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட 8,833 பெயர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளன. நடப்பு அக்டோபர் மாதத்திற்கான 1,06,48,406 மகளிருக்கான ரூபாய் 1,06,48,406,000/- உரிமைத்தொகையானது ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 14 அன்றே அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாகக் கொண்டுசேர்க்கப்பட்டுள்ளது. இப்பயனாளிகளில் முறையான வங்கிக் கணக்கினைக் கொண்டிராத 87,785 பயனாளிகளுக்கு அஞ்சல் பணவிடை மூலமாகவும் உரிமைத்தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பிஎஸ்சி படித்தவர்களுக்கு ரூ.1,40,000 சம்பளத்தில் விமான நிலையத்தில் வேலை!

x