அதிர்ச்சி...பிரதமர் மோடி தொடங்கிய கப்பல் போக்குவரத்து... 2வது நாளிலேயே முடங்கியது!


இலங்கை நாகை கப்பல்

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு நேற்று முதல் இயங்கத் தொடங்கிய பயணிகள் கப்பல் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு 150 பயணிகள் பயணிக்கும் வகையில் விரைவு பயணிகள் கப்பல் சேவையை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார்.

காலை 8.15 மணியளவில் 50 பயணிகளுடன் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை நோக்கி கப்பல் புறப்பட்டது. நண்பகல் 12.15 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைக்கு சென்று சேர்ந்தது. அதன்பிறகு காங்கேசன் துறையில் இருந்து மதியம் 1.45 மணிக்கு 29 பயணிகளுடன் புறப்பட்டு வந்த கப்பல் நாகை துறைமுகத்தை மாலை 5.15 மணிக்கு வந்தடைந்தது.

முதல் நாளான நேற்று பயணிகள் பலரும் ஆர்வத்துடன் கப்பலை செல்ஃபி எடுத்தனர். இந்த நிலையில், நாகை - இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. கப்பலில் பயணம் செய்ய வெறும் 7 பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்திருந்ததால் கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் கப்பல் சேவை தொடங்கிய மறுநாளே போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளது. இனி திங்கள், புதன், வெளி ஆகிய நாட்களில் மட்டுமே கப்பல் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கப்பல்

கப்பலில் பயணக்கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் அதைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சர்பனாந்த சோனாவாலிடம் தமிழக அமைச்சர் எ.வ வேலு வலியுறுத்தி இருந்தார். இது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்த நிலையில் பயணக்கட்டணம் குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தற்போது 7670 ரூபாய் கட்டணமாக உள்ள நிலையில் இது குறைக்கப்பட்டால் அதிக அளவில் பயணிகள் கப்பல் பயணத்தை விரும்புவார்கள் என கூறப்படுகிறது.

x