நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல்...பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்!


செரியபாணி கப்பல்

நாகையில் இருந்து இலங்கைக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க பிரதமர் மோடி - இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதைத்தொடர்ந்து நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. பணிகள் அனைத்தும் கடந்த மாதம் முடிவடைந்ததை அடுத்து, அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து கடந்த 8-ம் தேதி நாகை - இலங்கை இடையே கப்பல் சோதனை ஓட்டமும் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 10-ம் தேதி தொடங்க இருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீரென ரத்து செய்யப்பட்டு 12-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

செரியபாணி கப்பல்

பின்னர் நிர்வாக காரணத்துக்காக அதுவும் மாற்றப்பட்டு 14-ம் தேதிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த கப்பலுக்கு செரியபாணி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் 150 பேர் பயணிக்கலாம். ஒருவர் 50 கிலோ எடை கொண்ட பொருட்கள் எடுத்துச் செல்லலாம். பயணிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் கப்பலில் பயணம் மேற்கொண்டனர்.

தொடக்க நாளான இன்று பயணிக்க சிறப்பு கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பயண கட்டணம் 3000 ரூபாய் மட்டும் தான் என்றும், இன்று பயணிக்க 35 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் கட்டணம் ஜிஎஸ்டி உடன் சேர்த்து ரூ.7670. 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

x