அடர் பனியால் தவிக்கும் டெல்லி... 170 விமானங்கள், 20 ரயில்கள் தாமதம்!


டெல்லி

தலைநகர் டெல்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக 170-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 20 ரயில்கள் தாமதமாகியுள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக குளிர் அதிகரித்து கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியில் இன்று காலை, வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்ததால் கடும் குளிர் நிலவியது. இதன் காரணமாக தலைநகர் டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிளம்ப வேண்டிய 120 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதோடு 53 விமானங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி

இதன் காரணமாக விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகள் விமான நிலையத்தில் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். ரத்து செய்யப்பட்டுள்ள 53 விமானங்களில் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களும் அடங்கும் என்பதால் அந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்திருந்த வெளிநாட்டு பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ரயில்

இதனிடையே கடும் பனிமூட்டத்தால் 20 ரயில்களின் புறப்படும் நேரமும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. வடக்கு ரயில்வே தகவலின்படி ரயில்கள் சுமார் 6 முதல் 6:30 மணி நேரம் வரை தாமதமாக பயணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களில் சில ரயில்கள் ஒன்றரை மணி நேரம் வரை தாமதமாக பயணித்து வருவதாக ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி பஞ்சாப், ஹரியாணா, டெல்லி, மேற்கு ராஜஸ்தான், மேற்கு மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலை வேளைகளில் 200 மீட்டருக்கும் குறைவாகவே பார்க்கும் அளவிற்கு கடும் பனிமூட்டம் நிலவி வருவதாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

x