அனைவரும் முட்டை சாப்பிட பழகுவோம்... தமிழிசை சௌந்தரராஜனின் சூப்பர் டிப்ஸ்!


தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானா மாநிலத்தின் ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநரான தமிழிசை செளந்தரராஜன், ஒரு மகப்பேறு மருத்துவர் ஆவார். அவர் இப்போது முட்டைகளில் இருக்கும் அபரிமிதமான நன்மைகள் பற்றி பேசியுள்ளார்.

அரசியல் களத்தில் இருக்கும் தமிழிசை செளந்தரராஜன், தனது இன்ஸ்டா பக்கத்தில் மருத்துவம் சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். முட்டைகளில் இருக்கும் அபரிமிதமான நன்மைகள் பற்றி அதில் பேசியுள்ளார். அதில், “ஒரு முட்டையில் 6 கிராம் புரதம் உள்ளது. செலினியம் இருக்கிறது. அது நம் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஃபோலிக் இருக்கிறது. இது நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது. கர்ப்பிணிகளுக்கு முட்டையை கொடுக்கும் போது, அது வயிற்றில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும். இதில் லூட்டின், வைட்டமின் ஏ இருக்கிறது. இவை இரண்டும் கண் பார்வைக்கு நல்லது. குறிப்பாக இதை எடுத்துக்கொண்டால் கேட்டராக்ட் வராமல் தடுக்கும்.

முட்டை

வைட்டமின் ஏ, டி, பி5, பி12, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் இருக்கிறது. ஆக, உடலுக்கு தேவையான அத்தனை சத்துகளும் இருக்கிறது. அதனால் முட்டை சாப்பிடுவதை பழகுவோம். எல்லோருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும்...இதில் கொழுப்பு இல்லையா என்று?..இதில் கொழுப்பும் இருக்கிறது. அது மஞ்சள் கருவில் இருக்கிறது. 150 மில்லி கிராம் கொழுப்பு இருக்கிறது. 300 மில்லி கிராம் கொழுப்பு நமக்கு தேவையானது. அதனால், கொழுப்பு வேண்டாம் என்று நினைப்பவர்கள் மஞ்சள் கருவை தவிர்த்து, வெள்ளை கருவை எடுத்துக்கொள்ளலாம் ”என முட்டையின் நன்மைகள் பற்றி விவரித்துள்ளார்.

x