ராமர் கோயில் விழா எதிரொலி... வரலாற்று சாதனையாக விற்றுத் தீர்ந்தது ‘ராமசரிதமானஸ்’


கீதா பதிப்பகத்தின் ராமசரிதமானஸ் உள்ளிட்ட நூல்கள்

அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு, ’ராமசரிதமானஸ்’ என்ற ராமாயணத்துக்கு இணையான இதிகாச நூல் அதன் விற்பனை வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.

ராமசரிதமானஸ் என்பது அவதி மொழியில் இயற்றப்பட்ட ஒரு இதிகாசம் ஆகும். இது ஸ்ரீராமரின் மேல் அதீதமான பக்தி கொண்ட கோஸ்வாமி துளசிதாசரால் 16-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. ராமசரிதமானஸ் என்பதற்கு இராமரின் செயல்களை தொகுத்து எழுதப்பட்ட ஏரியை உருவகமாக கொண்ட நூல் என்று பொருள். வட இந்தியாவில் இந்துக்களின் பக்தி இலக்கியத்தில் முக்கிய நூலாகவும் கருதப்படுகிறது.

கீதா பதிப்பக நூல்களை பார்வையிடும் பிரதமர் மோடி

இந்த நூலை வாசிக்க, ராமரின் அருள் சித்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வால்மீகி ராமாயணத்தை உள்ளடக்கி இருந்தபோதும், அதன் மொழிபெயர்ப்போ தழுவலோ அல்ல. முற்றிலும் ராமரின் பராக்கிரமங்களை புகழ் பாடும் நூல் இது. ராம பக்தர்கள் மத்தியில் அதிகம் வாசிக்கப்படும் இந்த நூல், தற்போதைய ராமர் கோயில் குடமுழுக்கினை முன்னிட்டு அதிகம் விற்றுத் தீர்ந்தது.

ராமசரிதமானஸ் நூலை அச்சிடும் கோரக்பூரின் கீதா பிரஸ் பதிப்பகத்தார், தேவையைவிட அதிகமான ஸ்டாக் வைத்திருப்பது வழக்கம். ஆனால் ராமர் கோயில் குடமுழுக்கு வைபவத்தின் நெருக்கத்தில், விற்பனை எகிறியதில் புதிய வரலாற்று சாதனை நிகழ்ந்திருக்கிறது. 50 ஆண்டு கால ராமசரிதமானஸ் நூல் விற்பனையில் இதுவரையில்லாததாக கையிருப்பு நூல்கள் அனைத்துமே விற்பனையாகி விட்டன.

கோரக்பூர் கீதா பிரஸ்

நூல் கோரும் பக்தர்களுக்கு இல்லை என்று சொல்லும் நிலை முதல்முறையாக கீதா பிரஸ் பதிப்பகத்துக்கு நேர்ந்திருக்கிறது. பத்திரிக்கையின் அறங்காவலர் ஒருவர் ’ராமசரிதமானஸின் தேவை அதிகரிப்பால், நூலின் மொத்தக் கையிருப்பும் தீர்ந்துவிட்டதாகவும், தேவைக்கு ஏற்றவாறு விரைவில் வெளியிட முயற்சிப்பதாகவும்’ தெரிவித்துள்ளார். கீதா அச்சகத்தில் இருப்புப் பற்றாக்குறையை சந்தித்த நூல்களில் ராமசரிதமானஸ் மட்டுமன்றி, அனுமான் சாலிசா மற்றும் ஸ்ரீமத் பகவத் கீதை ஆகிய நூல்களும் சேர்ந்திருக்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...

x