பொங்கலுக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில்... சென்னை - நாகர்கோவில் இடையே இன்றும், நாளையும் இயங்கும்!


வந்தே பாரத் ரயில்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் மக்கள் பயணிப்பதால் அவர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்றும், நாளையும் சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில்

சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாகர்கோவில் வரை வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். அதையடுத்து நாகர்கோவில் வரை சோதனை அடிப்படையில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவில் வரை சிறப்பு வந்தே பாரத் ரயிலானது இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " வண்டி எண் 06081 சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் வந்தேபாரத் ரயிலானது காலை 5 மணிக்கு 13 மற்றும் 14-ந் தேதிகளில் கிளம்பி நாகர்கோவிலுக்கு 1 மணி 45 நிமிடங்களுக்கு சென்றடையும்.

வந்தே பாரத் ரயில்

இதேபோல் வண்டி எண் 06082 நாகர்கோவிலில் இருந்து 2 மணி 25 நிமிடங்களுக்குச் செல்லும் ரயிலானது சென்னைக்கு 11 மணி 25 நிமிடங்களில் வந்தடையும். இது சென்னை எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் சென்றடையும். இதே வழியாக நாகர்கோவிலில் இருந்து சென்னை வந்தடையும். முன்பதிவு செய்து பயணிக்கலாம்" என்று தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இந்த வந்தே பாரத் ரயிலானது இயக்கப்படுவதால் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் சிரமம் ஓரளவுக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுறது.

x