பழநி அருகே ரேக்ளா பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்: பரிசாக தங்க நாணயங்கள்!


பழநி அருகே கொழுமங்கொண்டானில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்.

பழநி: பழநி அருகே கொழுமங்கொண்டானில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் காளைகள் சீறிப் பாய்ந்தன.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் மூன்றாண்டு சாதனைகள் மற்றும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 101 வது பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு பழநி அருகே கொழுமம்கொண்டான் ஊராட்சியில் ரேக்ளா பந்தயம் இன்று நடைபெற்றது.

திமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியின் தலைமை வகித்தார். ரேக்ளா பந்தயத்தை அமைச்சர் அர.சக்கரபாணி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பெரிய காளைகள், சிறிய காளைகள் என இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டு பெரிய காளைகளுக்கு 300 மீட்டர் தூரமும் சிறிய காளைகளுக்கு 200 மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் போட்டிகளில் பங்கேற்றன. பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை சாலையோரம் இருபுறமும் காத்திருந்து மக்கள் கண்டுகழித்தனர்.

வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ஒன்றரை பவுன் தங்க நாணயம், கேடயம், இரண்டாவது பரிசாக ஒரு பவுன் தங்க நாணயம், கேடயம், மூன்றாம் பரிசாக முக்கால் பவுன் தங்க நாணயம், கேடயம் வழங்கப்பட்டது.

x