உயிர் பறிக்கும் ‘விஷக் கொடுக்கு’களா சோஷியல் மீடியா கமெண்ட்ஸ்?!


சென்னை திருமுல்லைவாயல் அபார்ட்மென்டில் இருந்து தவறி விழுந்து காப்பாற்றப்பட்ட குழந்தையின் தாய் ரம்யா, சமூக வலைதள கமெண்ட்ஸ்களால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார். பொதுவாகவே குழந்தைப் பெற்ற பெண்கள் ‘பேரண்டிங்’ மன அழுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிப்பார்கள். அந்தநேரத்தில், ஏதோ ஒரு நிகழ்வின் மூலம் கூடுதலாக மற்றொரு மன அழுத்தத்தை புறச்சூழல்களின் வழியாக அதிகமாகச் சந்திக்கும்போது தன்னைத்தானே குற்றவாளியாக்கி கொள்ளும் மனநிலைக்கு அவர்களைத் தள்ளி விடும் பெரும் பங்களிப்பை இந்தச் சமூகம் சமீபகாலங்களாக தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறது.

என்ன, ஏது என்று சரியாக அறியாமல் சமூக வலைதளத்தில் பார்க்கும் ஒரு விஷயத்தில் போகிற போக்கில் கமெண்டிடுவது என்பது, பிறரின் வாழ்வில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணராத மனப்பான்மை இன்று அதிகரித்துள்ளது. நிச்சயமாக இந்த தாய் ரம்யாவின் உயிர் பறித்த ‘அந்த கமெண்ட்’ ஆனது, காப்பாற்றப்பட்ட அவரது குழந்தையின் மீதான அக்கறையின் வெளிப்பாடாகவும், ரம்யாவை கவனிக்க தவறிய தவறிழைத்த தாயாகவும் குறிப்பிட்டு சித்தரித்துத்தான் இருந்திருக்கும். அத்தகைய அக்கறை நிச்சயம் குழந்தையைப் பெற்ற தாய்க்கு கமெண்டிடுகிறவர்களை விட பலமடங்கு அதிகம் இருந்திருக்கும். மொத்தத்தில் அது எதன் காரணமாக ஏற்பட்ட தவறாகவும் இருக்கட்டும். அதனுள்ளே பூதக் கண்ணாடியை நாம் பொறுத்திப் பார்க்க வேண்டிய தேவை இல்லை.

கூடுதலாக, அவரை கமெண்டில் திட்டிய நோக்கமே காப்பாற்றப்பட்ட குழந்தைக்கு ஆதரவானதாகத்தான் இருக்கும் எனும்போது, தற்போது அந்தப் பெண்ணின் இறப்பினால் இன்னும் அதிகம் கூடுதல் பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது என்றால் அது அந்தக் குழந்தை தான். பாதிக்கப்பட்ட அந்த பச்சிளம் குழந்தையின் தாயற்ற நிலை என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

முக்கியமாக, இப்படியான வன்மக் கமெண்டினால் சுற்றத்தவர்களும், கணவரும் கூட மனதால் பாதிக்கப்பட்டு வேதனையைச் சந்தித்திருக்கலாம். அது பாதிக்கப்பட்ட தாயை இன்னும் கூடுதலாக ஓரு மன கீழ்நிலைக்கு போவதற்கு தூண்டி, அந்த தாய்க்கு புத்திமதியை சொல்லதூண்டும் பணியைச் செய்ய ஏதுவானதாகவும் இருக்கிறது. முக்கியமாக, அவர்கள் அனைவரும் அவருக்கு பெரும் ஆறுதலாகவும் இருந்திருக்கலாம். ஆனால், மனதை பாதிப்படையச் செய்ததன் மூலம்... எது எப்படியோ போனது ஓர் உயிர்.

வன்மக் கிடங்குகளா கமெண்ட்ஸ்?!

ஒருவரை நேருக்கு நேர் பேசினால் மட்டும் அல்ல... உண்மைக்குப் புறம்பாக, சரியாகத் தெரிந்துகொள்ளாமல் கூறப்படும் ஒரு கருத்தின் வதந்தி, புறணிகளானது எந்த ரூபத்தில் பரப்பப்பட்டாலும், சம்பந்தப்பட்டவர்களை சில பல நாட்கள் கடும் மன அழுத்தத்திற்குள் தள்ளி விடும் அபாயம் கொண்டதாக இருக்கிறது. இப்படியான கருத்துகள் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் எதிரொலித்து, வேலைகளில் பெரும் தாக்கத்தை நீடிக்க வைத்து ஒன்றிரண்டு நாட்களாவது அவர்களை அல்லல்படுத்தி விடக்கூடிய தன்மை கொண்டது.

இன்னும் சிலர் இதனைப் பெரிதாக கருதாமல், எந்தவித அங்கலாய்ப்புகளுக்கும் இடம் தராமல் எளிதாகக் கடந்து செல்லலாமே? இதெல்லாம் ஒரு விஷயமாக எண்ண வேண்டுமா? என கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அப்படியானவர்கள் பெரும்பாலும் தனக்கு நடந்த நேரடித் தாக்கங்களில் சிக்காதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடாகத்தான் அதனைப் பார்க்க வேண்டும். அவர்கள் சொல்வது போன்று வைத்துக்கொண்டாலும், ஒருவரைப்போல எல்லோராலும் ஒரு மன இறுக்கத்துடனும், தைரியத்துடனும், யார் என்ன சொன்னால் என்ன எனும் விட்டேற்றி மன நிலையுடனும் இருக்க முடியுமா என்பது பெரும் சந்தேகம்தான். அவரவர்களின் குணம், இயல்பு நிலை ஒருவருக்கொருவர் மாறுபடத்தானே செய்யும்.

ஒருவரின் வாழ்க்கையின் இவ்வாறாக சரியாக தெரியாது பரப்பப்படும் வதந்திகளின் மூலமாக எதிரொலிக்கப்படும் கடும் பாதிப்புகள் நிச்சயம் நபருக்கு நபர் மாறுபடுகிறது. அதில் தன்னை சுற்றியுள்ளவர்களின் நடவடிக்கை, ஆதரவு, ஆறுதல், அதனைப் பொருட்படுத்தாமை மூலமாக கரையேறுபவர்களும் இருக்கிறார்கள்.

சிலருக்கு அதே கருத்துகளால் வாழ்க்கைக்குள் பெரும் புயல் அடிக்கலாம். தனக்கு ஆறுதலாக, தன்னை தாங்கி பிடிக்க யாரும் இல்லாதநிலைக்கு தள்ளிவிடப்படும்போது, இதன் தாக்கம் பெரும் மன அழுத்தத்திற்குள் கொண்டுபோய் விடும். இதனால் அவர்கள் தன்னையே மாய்த்துக்கொள்ளும் அவசர நிலைக்குகூட யாரோ ஒரு மூன்றாம் தர மனிதர்களால் தள்ளி விடப்படுகிறார்கள்.

இப்படியான நிலைக்குத் தள்ளிய கமெண்டிட்டவருக்கும், பாதிக்கப்பட்ட இருவருக்குமான அதிகபட்ச தொடர்பு அந்த கமெண்ட் மட்டும்தான். அதனை தன் மனதிற்குள் முழுவதுமாக கொண்டு வரவேண்டிய அவசியம் நிச்சயம் இல்லை. அது வேண்டவும் வேண்டாம்.

பொதுவாக, எளிதாக மன அழுத்தத்தை உண்டாக்கக்கூடிய இடத்தில் முக்கிய பங்கு வகிப்பது சமூகவலைதள கமெண்டுகள் மற்றும் செய்தி சேனல்களில் வெளியிடப்படும் செய்திகளின் கீழ் வரும் பின்னூட்டங்களும் மிக மோசமான தரத்துடன் விமர்சிக்கப்பட்டே வருகின்றன. இதில் உண்மை நிலை என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த விதத்திலும் சற்றும் அறிமுகம் இல்லாதவர்கள் கூட கடுமையான விமர்சனங்களை, மிக எளிமையாக தூவிவிட்டு கடந்து விடுகிறார்கள்.

ஆனால் இத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்ளும் நபரையோ, தவறே இழைக்காத அல்லது அந்த தவறுக்கே காரணம் ஆகாத யாரே ஒருவரை, பெரும் குற்றம் இழைத்துவிட்டோமோ என்னும் குற்ற மனப்பான்மைக்குள் எளிதாக தள்ளி தனக்குத்தானே வலி கொடுத்துக் கொள்ளக்கூடியதாக்கி விடுகிறது. இத்தகைய கமெண்டுகளின் மூலம் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படும் சாமான்யர்களின் நிலை என்னாகும்?

மேலும், இத்தகைய மன பய உணர்வுகளுக்குள் மற்றவர்களை தள்ளி விடும் வன்மக் கமெண்டிடுபவர்களுக்கு நிச்சயம் தங்களின் இந்த கமெண்டு தான் அவர்களை இத்தகைய நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது என்று நேரடியாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களின் அடுத்ததான முழுக் கவனமும் மற்றுமொரு விஷயத்தில் யாரோ ஒருவரை கமெண்டாடிக் கொண்டிருப்பதில் முழுப் பெற்றிருக்கும்.

கமெண்டிடுபவர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இவர்களுக்கு ஒரு செய்தியை பார்க்கும் நேரத்தில் தோன்றும் அந்த நேர உணர்வு வெளிப்பாடாகத்தான் அது இருக்கலாம். ஆனால், முழுமையாக என்ன நடந்தது என்று தெரியாத விஷயத்தில், தெரிந்தது போல் அருகாமை காட்டுவது என்பது ஒருவகை மனபாதிப்பின் வன்ம உணர்வுதான்.

கமெண்டிட வேண்டாம் என யாரும் சொல்ல முடியாது. எந்த விஷயத்தில் எப்படி அணுக வேண்டும் என்கிற குறைந்தபட்ச தனக்குத்தானே இருக்கக்கூடிய ஒரு நியாய தார்மீக உணர்வு எல்லோருக்கும் இதில் நிச்சயம் வேண்டும். இல்லையென்றால் இதுபோன்று யாரோ, எங்கோ, நிச்சயம் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருப்பர். கமெண்டிடுபவர்களும் இதற்கு, தாங்கள்தான் காரணம் என தெரியாமலேயே குற்றம் இழைத்து கொண்டிருக்க நேரிடும்.

முழுவதும் தெரியாத விஷயங்களில் ஒருவரை தரக்குறைவாகவோ, அசிங்கமாகவோ, இப்படி செய்திருப்பார்கள் அதனால் இப்படி ஆகியிருக்கும் என்றோ நாட்டாமை செய்வதுதான் இதற்கு முதற் காரணம்.

நிமிஷ நேர முடிவுகள் தானே, மனிதனை தற்கொலை வரைக்கும் தூண்டி விடுகிறது. ஒருவருக்கு, முகம் தெரியாத யாரோ ஒருவரின் ஒரு கமெண்டின் மூலம் தரப்படும் மன அழுத்தத்திற்கு நிச்சயம் தீர்வு காணப்பட வேண்டிய இடத்தில் தற்போதைய டிஜிட்டல் தலைமுறை இருக்கிறது. இந்த மன அழுத்தத்திற்குள் நிச்சயம் சிக்கிக் கொள்ளக்கூடாது.

இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்

ஒருவரை நேரில் குற்றம்சாட்டினால், அவதூறு பேசினால் அது புகாருக்குட்பட்டால் என்ன குற்ற நடவடிக்கை போலீஸார் எடுப்பார்களோ அதனை எவ்வித புகார்களும் அல்லாமல் தானே முன்வந்து காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் இப்படியான வக்கிர, வன்மக் கமெண்டுகளை வெளியிடுபவர்களும் தானே முன்வந்து திருந்த வேண்டும். இது அவர்களின் குடும்பத்து விஷயம்போல் பாவிக்கும் மனநிலை பெற வேண்டும்.

சக மனிதர்கள் மீது காட்டப்படும் காரணமற்ற வெறுப்பு களமாக இன்று சமூகவலைதளம் மற்றும் பத்திரிகை, டிவி சேனல்களில் ஒளிப்பரப்பப்படும் செய்திகளின் பின்னூட்டங்களின் பதிவுகள் மாறிவிட்டது. படித்துப் பார்த்தால் அத்தனையும் மனித மனங்களில் இருந்து மிகச்சரியாகத் தேர்ந்தெடுத்து தொடுக்கப்பட்ட வன்ம, வக்கிர கமென்டுகளின் கழிவுக் குவியல்களாகவே இருக்கிறது.

எதைச் சொன்னால் யார் எப்படி காயப்படுவார்கள் என்பது தெளிவாக புரிந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சராசரியான பதிவிற்கு பதிலடி கொடுக்க முடியாவிட்டால் தடாலடியாக தன்னை அங்கு தாதாவாக நிலைநிறுத்தி எதிராளியை கருத்துரீதியாக எதிர்கொள்ள முடியாமல் விதாண்டாவாத தர்க்கத்திற்குள் இழுத்து, தகாத வார்த்தைகளைக் கக்கி சண்டையாக்கி விடுகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.

இதுபோன்ற கமெண்டுகள் இனியும் எங்கோ, யாரோ ஒரு முகம் தெரியாத சக மனிதர்களின் உயிர் பறிக்கும் ‘விஷக் கொடுக்கு’கள் ஆகாமல் இருக்க குறைந்தபட்ச மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது.

பின்குறிப்பு: இது அவரவர்களின் வாழ்க்கை. அவர்களுக்கான நியாய, அநியாய உணர்வுகளை அவர்களே பார்த்துக்கொள்ளட்டும். நாம் ஏன் ஒருவரின் உள்ளார்ந்த வாழ்க்கையில் தலையிட வேண்டும். சரியோ தவறோ அது அவர்களுடையதாகிறது எனும்போது மற்றவர்களின் உள்ளார்ந்த வாழ்க்கையில் நமக்கு என்ன வேலை?