யானைகளுடன் இயைந்து வாழ்வதே தீர்வு - ‘தடம்’ குழுக்கள் மூலம் வனத்துறை முயற்சி


கோவையில் வனப்பகுதியை ஒட்டிய விளைநிலத்தில் புகுந்த காட்டு யானைகள்.

கோவை: தமிழகத்தில் மனித- வன உயிரின முரண்பாடு அதிகமுள்ள 95 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளூர் மக்கள் அடங்கிய ‘தடம்’ குழுக்கள் மூலம் முரண்பாடுகளை தடுக்க வனத்துறை புது யுக்திகளை வகுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் பல்லுயிர் பாதுகாப்பைமேம்படுத்தவும், மனிதர்களுக்கும், யானை, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன உயிரினங்களுக்கும் இடையிலான மோதல்களை குறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது குறித்து, தமிழக அரசின் காலநிலை மாற்றத்திற்கான பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் தலைமை திட்ட இயக்குநர் அன்வர்தீன் கூறியதாவது: "மனித- வன உயிரின முரண்பாடுகளை தடுக்கும் வகையில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து, வனப் பகுதிகளை விட்டு வெளியே வரும் யானைகளை அடர்ந்த காடுகளுக்குள் திருப்பி அனுப்புதல், கிராம எல்லைகளில் அகழிகள் வெட்டுதல், சூரிய ஆற்றல் மின்வேலி அமைத்தல், செயற்கை நுண்ணறிவு திட்டங்கள் மூலம் கண்காணித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் அதிகம் மனித-வன உயிரின முரண்பாடுகள் ஏற்படும் 95 கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் உள்ளூர் கிராம மக்கள் அடங்கிய ‘தடம்’ குழுக்கள் மூலம் முரண்பாட்டை குறைக்க ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கோவை 16, கூடலூர் 17, சத்தியமங்கலம் 10, ஆசனூர் 10, தருமபுரி 10, பொள்ளாச்சி 6, ஓசூர் 15, நீலகிரி 7, திண்டுக்கல் 2, வேலூர் 1, திருப்பத்தூர் 1 என மொத்தம் 95 கிராமங்களில் ‘தடம்’ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. யானைகள் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் புதியதா www.tnfdyaanai.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்ட வருகிறது.

இதில், யானைகள் ஏன் வெளியேறுகிறது, அவற்றை எப்படி கையாளுவது, உயிர் சேதம் மற்றும் பயிர் சேதம் தடுத்தல், ஒரே யானை அடிக்கடி வருகிறதா, யானைகளின் குணாதிசயங்கள், முரண்பாடுகளுக்கான காரணம் என்ன என்பன போன்ற ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்குவதன் மூலம் முரண்பாடுகள் குறையும் என வனத்துறை நம்புகிறது.

காதுகளை வேகமாக அசைத்தல் உள்ளிட்ட கோபத்தை வெளிப்படுத்தும் யானைகளின் உடல்மொழி குணாதிசயங்கள் குறித்து ‘தடம்’ குழுக்கள் மூலம் உள்ளூர் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பயிர் சேதம் மற்றும் உயிர் சேதங்களுக்கு உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை வழங்குதல் போன்றவையும் அடங்கும். மனித-வனஉயிரின முரண்பாடுள்ள பகுதிகளில் கேமராக்களை நிறுவி யானைகளின்புகைப்படங்களை பதிவு செய்தல், ஒவ்வொரு யானைக்கும் தனி அடையாள எண் வழங்கி அவற்றை அடையாளப்படுத்துதல் போன்றவையும் செயல்படுத்தப்படும்.

கோவை தடாகத்தில் உள்ள செங்கல் சூளையில் புகுந்த யானை.

கிராமப் பகுதிகளில் அடிக்கடி யானைகள் வரும் இடம், நேரம் உள்ளிட்டபல தகவல்களை திரட்டி ஆய்வு செய்து டிஜிட்டல் வரை படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இவை குறித்த தகவல்கள், ‘வன உயிரின நடமாட்டத்தை உடனுக்குடன் தகவல் பகிரும் பொதுமக்கள் - வனத்துறை ஒருங்கிணைப்பு அமைப்பு’ என்ற தகவல் மேலாண்மை மூலம் மனிதவன உயிரின முரண்பாடுகளை தடுப்பதில் முக்கியப்பங்கு வகிக்கும்.

மனிதர்களை பாதுகாப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், யானைகளுடன் மனிதர்கள் இயைந்து வாழும் தீர்வை நோக்கி வனத்துறை பயணிக்கிறது. மனித - வன உயிரின முரண்பாடுகளை தடுக்கும் நீண்ட கால திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. முதலில் வன உயிரினங்களால் மனித உயிர் இழப்புகள் ஏற்படாமல் தடுப்பது முக்கிய நோக்கமாகும்.

மனித உயிர் இழப்புகளை தடுப்பதற்கு யானைகள் நடமாட்டத்தை முன்கூட்டியே பொதுமக்களுக்கு தகவல் தெரிவிப்பதன் மூலமும் யானைகளுடைய உடல் மொழி, குணாதிசயங்களையும் அறிந்து எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தான பயிற்சியும் கிராம மக்களுக்கு வழங்கப்படும். கிராம அளவிலான யானை மனித முரண்பாடு மேலாண்மை திட்டங்கள் தயாரிக்கப்படும். பொதுமக்கள், வனத்துறை மற்றும் இதர துறைகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் மூலம் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

x