தஞ்சாவூர்: கோவை அருகே உள்ள மோளப்பாளையம் நொய்யலாற்றுப் பள்ளத்தாக்கில் தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையினர் புதிய கற்காலச் சான்றுகளைக் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் கூறியிருப்பதாவது: மோளப்பாளையத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையினரால் 2021-ல் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது மேற்கொள்ளப்பட்ட இடத்தின் தற்போதைய தன்மையை புரிந்துகொள்ளவும், முதுகலைப் பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறை தலைவர் வீ.செல்வகுமார் தலைமையில் அகழாய்வு நடைபெற்றது.
அப்போது, 3 மனித எலும்புக்கூடுகளும், அதிகமான அளவில் விலங்கு எலும்புகளும், கடல் கிளிஞ்சல், அம்மி கற்கள், அரவைக் கற்கள், கல் உருண்டைகள், தானிய விதைகள், கற்கோடரிகள், புதிய கற்காலப் பானைகள், கடற் சங்கில் செய்யப்பட்ட மணிகள், சேமிப்புக் குழிகள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன.
தக்காணக் கல்லூரியின் மானுடவியல் அறிஞர் வீணா முஷ்ரீப் திரிபாதி மனித எலும்புகளை ஆராய்ந்து, இவை 3-லிருந்து 7 வயதுக்குட்பட்ட குழந்தைகள், நடுத்தர வயதுப் பெண் ஒருவரின் எலும்புகள் என அடையாளப்படுத்தியுள்ளார். இந்த அகழாய்வில் கிடைத்த மாட்டு எலும்புகள், ஆடுகளின் எலும்புகள், காட்டு விலங்கு எலும்புகள் கேரளப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜி.எஸ். அபயன் என்பவரால் அடையாளப்படுத்தப்பட்டது.
நன்னீர் சிப்பியில் கலை நயத்துடன் செய்யப்பட்ட ஒரு மீன் வடிவப் பதக்கம் அவர்களது அழகியலை உணர்த்துகிறது. இதன் துடுப்புகளும் அழகாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. மேலும், கொள்ளு, உளுந்து, பச்சைப் பயிறு, அவரை போன்ற தாவரங்களின் விதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு வாழ்ந்த புதிய கற்கால மக்கள் பல குழிகளைத் தோண்டி அவற்றைச் சேமிப்பு கிடங்குகளாகவும், பிற செயல்பாடுகளுக்காகவும் பயன்படுத்தியுள்ளனர். இக்குழிகளில் கரிந்த விதைகள், எலும்புகள், மான் கொம்புகள், கற்கருவிகள், பானை ஓடுகள் ஆகியவை கிடைத்துள்ளன.
மோளப்பாளையத்தின் புதிய கற்காலத் தொல்லியல் இடத்தைச் சுற்றி மலைகள் அரண் போல அமைந்துள்ளன. நொய்யல் ஆற்றிலிருந்து தொலைவில் அமைந்துள்ள இந்த இடம் மாடுகளின் பட்டிகளை அமைக்கவும், வேளாண்மை செய்யவும் பொருத்தமான இடமாக இருந்தது. இந்த இடத்தின் சுற்றுச்சூழல் வளத்தின் காரணமாக புதியகற்கால மக்கள் இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பல தொல்லியல் இடங்கள் மெருகேற்றப்பட்ட கோடரியை வெளிப்படுத்தியிருந்தாலும், அவை அனைத்தும் புதிய கற்கால இடங்கள் என்று கருத முடியாது. பானை ஓடுகள், எலும்புகள் உள்ளிட்ட வாழ்விடச் சான்றுகள் இருந்தால் மட்டுமே புதிய கற்கால இடங்களை தெளிவாக அடையாளப்படுத்த இயலும். இந்த அகழாய்வின் மூலம் தமிழகத்தின் மேற்கு பகுதியில் முதன்முதலாக தெளிவான புதிய கற்காலச் சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.