அதிர்ச்சி.. அக்.12-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் குடும்பநல அறுவை சிகிச்சைகளை நிறுத்த முடிவு


மதுரை இராசாசி மருத்துவமனை

அக்.12-ம் தேதி (வியாழன்) முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவுமனைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் குடும்ப நல அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளப் போவதில்லை என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதனால், நடுத்தர, ஏழை கர்ப்பிணி பெண்கள் குடும்ப நல அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாமல் பெரும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் (CABINET MEETING காணொலி வாயிலாக நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மதுரை மாநகர சுகாதார அலுவலரை பணிநீக்கம் செய்ய கோரியும், மகப்பேறு மருத்துவர்களின் பணிச்சுமையைக் குறைக்க கோரியும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பாக மாநிலம் முழுவதும் நடந்து வரும் போராட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அறுவை சிகிச்சை

இரு கோரிக்கைகளுக்கும் இதுவரை அரசு தரப்பிலிருந்து எந்த ஒரு தெளிவான உறுதியும் அளிக்கப்படாமல் இருக்கும் நிலையில் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் போராட்டங்களை தீவிரப்படுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து டாக்டர் செந்தில், " போராட்டத்தின் அடுத்த கட்டமாக வரும் 12-ம் தேதி முதல் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் குடும்ப நல அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளப் போவதில்லை என்றும், மாநிலம் முழுவதும் குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்களை புறக்கணிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது" என்று கூறினார்.

108 ஆம்புலன்ஸ்

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மாவட்ட மருத்துவமனைகளில் குடும்பநல அறுவை சிகிச்சைகள் முக்கியமானவை. இதே சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொண்டால் ரூ.1 லட்சத்திற்கு மேல் செலவாகும். நடுத்தர, ஏழை மக்களால் இந்த தொகையை செலுத்தி அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள இயலாது.

அதனால், இந்த சிகிச்சைகளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் நிறுத்தினால் கர்ப்பிணி பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

இதுவரை அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகளை மட்டும் நிறுத்திய அரசு மருத்துவர்கள், தற்போது அடுத்தக்கட்டமாக மிகவும் சிக்கலான அத்தியவாசியமாக தினசரி நடக்கும் குடும்ப நல அறுவை சிகிச்சைகள் நிறுத்தும் முடிவை எடுத்து போராட்டத்தை அடுத்தக்கட்டத்திற்கு நகரத்தியுள்ளதால் குடும்ப நல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள முடியாமல் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் ஏற்படும். தமிழக அரசு உடனடியாக தலையீட்டு மதுரை மாநகராட்சி நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்திற்கும் இடையே நீடிக்கும் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாகிறார் காஜல் அகர்வால்!

x