உலகின் சிறந்த பாஸ்போர்ட் நாடுகள் பட்டியல்; இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?


பாஸ்போர்ட்

சர்வதேசளவில் பயணத்திற்கு ஏற்ற பாஸ்போர்ட்டுகளை தரவரிசைப்படுத்தியுள்ளது ’ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்’. 2024-ம் ஆண்டுக்கான அதன் பட்டியலில் இந்தியாவின் இடம் குறித்தும் பார்ப்போம்.

2024-ம் ஆண்டின் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தரவரிசைப் பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசியாவின் ஜப்பான், சிங்கப்பூர் ஆகியவை முதலிடத்தைப் பிடித்துள்ளன. மிக மோசமான பாஸ்போர்ட் அணுகல் நாடுகளாக பாகிஸ்தான் (101), ஈராக் (102), சிரியா (103), ஆப்கானிஸ்தான் (104) ஆகியவை தரவரிசையில் பின்தங்கியுள்ளன.

பாஸ்போர்ட்

இந்தியாவின் அண்டை நாடுகளைப் பொறுத்தளவில் மாலத்தீவுகள் (58), சீனா (62), பூட்டான் (87), மியான்மர் (92), இலங்கை (96), பங்களாதேஷ் (97), நேபாளம் (98) ஆகியவை அடைப்புக்குறியில் உள்ளவாறு அதற்கான தரவரிசையில் இடம்பிடித்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தளவில் தனது முந்தைய ஆண்டு தரவரிசையான 80-வது இடத்திலேயே இந்த ஆண்டும் நீடிக்கிறது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 62 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

’ஹென்லி அன்ட் பார்ட்னர்ஸ்’ வெளியிட்டுள்ள ’ஹென்லி பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியல் - 2024’ என்பது, நாடுகளின் பாஸ்போர்ட் சக்தியை பறைசாற்றுகிறது. முன் விசா இன்றி பயணத்தை சாத்தியமாக்குவது, குறிப்பிட்ட நாட்டில் சென்று இறங்கியதும் விசா பெறுவது, பார்வைக்கான விசா நடைமுறைகளை எளிதாக்குவது உள்ளிட்ட அனுகூலங்களின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் தயாராகிறது.

பாஸ்போர்ட்

மேலும் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் வழங்கிய தரவுகளின் அடிப்படையிலும் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. உதாரணமாக, தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 194 விசா இல்லாத இடங்களுக்கு பயணப்படலாம். தரவரிசையில் 104-வது இடத்திலிருக்கும் ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், 28 இடங்களை மட்டுமே அணுக முடியும்.

இதையும் வாசிக்கலாமே...

x