பொங்கல் பண்டிகை... நாளை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நாளை (ஜனவரி12) முதல் ஜனவரி 14-ம் தேதி வரை பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. அதற்கு அடுத்த இரு நாட்களும் விடுமுறை நாட்களாக உள்ளது. அதேபோல் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய இரு தினங்களும் விடுமுறை நாட்களாகவே உள்ளது. எனவே, இந்த தொடர் விடுமுறையை பயன்படுத்தி சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் அனைவருமே தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

அதனால் சென்னை மற்றும் பெருநகரங்களில் இருந்து தமிழ்நாடு முழுவதும் சிறுநகரங்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் சேர்த்து சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. நாளை முதல் மூன்று தினங்களுக்கு 19,484 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 4,706 சிறப்புப் பேருந்துகள் என 3 நாட்களுக்கும் மொத்தம் 11,006 பேருந்துகளும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 8,478 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்படும். புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகரில் இருந்து இயக்கப்படும். திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோவை, நெல்லை கோட்டங்களைச் சேர்ந்த பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும்.

திருச்சி, தஞ்சை, கரூர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கத்தில் இருந்தும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புப் பேருந்துகள் குறித்து அறியவும், புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். பொங்கல் முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வர 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,830 சிறப்புப் பேருந்துகளும், பிற ஊர்களுக்கு 6,459 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

x