டெல்டா பாசனத்திற்காக இந்த ஆண்டு சரியான நேரத்தில் திறக்கப்பட்ட மேட்டூர் அணை, நீர் இல்லாததால் மூடப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த டெல்டா விவசாயிகளின் எதிர்காலமும், தமிழகத்தின் உணவுத் தேவையும் மிகப்பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.
காவிரி டெல்டா பாசனங்களின் நீர் ஆதாரமாக மேட்டூர் அணை திகழ்ந்து வருகிறது. கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் தங்கு தடை இல்லாமல் வந்து கொண்டிருந்ததால் டெல்டாவில் முப்போகம் சாகுபடி நடைபெற்று வந்தது. ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டப்பட்டது. கர்நாடகாவின் இந்த அத்துமீறல் காரணமாக காவிரி நீர் வரத்து தடைபட தொடங்கியது.
அதன் பின்னர் கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகளையும் கர்நாடகா கட்டியதால் காவிரியில் இயல்பான நீர் வரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. கர்நாடகத்தில் கடும் மழை வெள்ளம் ஏற்பட்டால் அதன் உபரி நீரை மட்டுமே காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தற்போது ஒருபோக சாகுபடிக்கு வழி இல்லாமல் இருக்கிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி குருவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. குருவை சிறப்பு தொகுப்பு திட்டமும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டதால் சுமார் 7 லட்சம் ஏக்கரில் டெல்டாவில் குருவை சாகுபடி நடந்தன. ஆனால் கர்நாடகத்தில் இருந்து மேட்டூருக்கு நீர் கிடைக்காததால் மேட்டூரில் இருப்பு இருந்த நீர் முழுவதும் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது.
தற்போது கிருஷ்ணராஜ சாகர் அணையில் 100 அடி நீர் இருப்பு உள்ளது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி 3,000 கன அடிநீரை கர்நாடகா திறக்கவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் வெகுவாக குறைந்து அணையின் நீர் மட்டம் மளமளவென சரிந்துவிட்டது. மேட்டூர் அணைக்கான நீர் வரத்து வெறும் 139 கன அடியாக மட்டும் இருந்தது. இதுவும் 122 அடியாக தற்போது குறைந்துள்ளது.
நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 31.75 அடியாக இருந்தது. தற்போது 31 அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் மொத்தம் 8.22 டிஎம்சி நீர் உள்ள நிலையில் மேட்டூர் அணையில் 9.22 டிஎம்சி நீர் குடிநீர், மீன்வள பாதுகாப்புக்காக தேக்கி. வைக்கப்பட வேண்டும். எனவே மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கான நீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது.
இதனால் குருவை சாகுபடி அழிந்துவிட்ட நிலையில் சம்பா சாகுபடியும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதோடு தமிழ்நாட்டின் உணவு உற்பத்தியும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு அரிசி விலை உயரவும், தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.