ஐசியூக்களில் ஆன்மீக பஜனை - மருத்துவமனை நிர்வாகத்தின் புதிய திட்டம்!


ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் நோயாளிகள் விரைவில் குணமடைய உதவுவதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆன்மீக பஜனைகளை ஒலிக்கவிட மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சையில் இருப்போர் விரைவில் உடல் நலமடைய வேண்டுமெனில் நல்ல இசையை ரசிக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது மனதை உற்சாகமடைய செய்யும். இப்படி இருக்கையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பஜனை பாடல்களை ஒலிக்கவிட மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்தான் பஜனை பாடல்கள் ஒலிபரப்பப்பட இருக்கிறது. இந்த மருத்துவமனையின் ஐசியு பிரிவில் பாடல்கள் ஒலிக்கப்படும். மருத்துவமனையின் அதிகாரிகள் அனைத்து ஐசியூ பிரிவிலும் இந்த பாடலை ஒலிபரப்ப அனுமதியளித்துள்ளனர். இந்த ஆன்மீக பஜனைகள் நோயாளிகளின் எண்ணத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், இது நோயிலிருந்து அவர்களை விரைவில் குணமடைய வைக்க உதவும் என்று மருத்துவமனை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது குறித்து மருத்துவமனையின் துணை வேந்தர், டாக்டர் அபினாஷ் ரூத் கூறுகையில், "இனிமையான ஒலி குணமடைவதில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது தொடர்பான திட்டம் குறித்து ஆலோசித்த பிறகு மருத்துவமனையின் அனைத்து ஐசியூக்களிலும் பஜனையை ஒலிக்கவிட முடிவெடுத்துள்ளோம். இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும். இதற்காக அரசு ஒப்புதலும் பெறப்படும். இப்பணியை மேற்கொள்வதற்கு தனியாரிடம் டென்டர் விடப்படும்" என்று அவர் கூறியுள்ளார்.

நோயாளிகள் விரைவில் குணமடைய இதுபோன்று இசையை பயன்படுத்தப்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு காலகட்டத்தில் குஜராத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இதுபோன்று இசை ஒலிக்கப்பட்டது.

ஆனால் தற்போது ஒடிசா மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு சில எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன. அதாவது, ஆன்மீக பஜனையை ஒலிக்கவிடுவது என்று முடிவெடுத்தால் எந்த மதத்தின் பஜனையை ஒலிக்கவிடுவது என்கிற கேள்வி எழும். சிலர் பெரும்பான்மை மதத்தின் பஜனை பாடலை கேட்பார்கள். சிலர் சிறுபான்மை மதத்தின் பாடலை விரும்புவார்கள். இன்னும் சிலர் மதமற்றவர்களாக இருப்பார்கள். அப்படி இருக்கும்போது இது தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

ஒருவேளை மருத்துவமனை குறிப்பிட்ட மதம் தொடர்புடைய பாடல்களை ஒலிக்கவிட்டால் பிரச்சினைகள்தான் எழும் என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர். எது எப்படி இருந்தாலும் நோயாளிகள் விரைவில் குணமடைய தரமான சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

x