‘ஞானவாபி மசூதியின் தொல்லியல் ஆய்வு முடிவுகள் மக்கள் பார்வைக்கு எப்போது வரும்?’ முடிவெடுக்கும் நீதிமன்றம்


வாராணசியில் ஞானவாபி மசூதி மற்றும் காசி விஸ்வநாதர் ஆலயம் ஆகியவற்றின் அமைவிடம்

ஞானவாபி மசூதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வின் முடிவுகள் எப்போது மக்கள் பார்வைக்கு பகிரங்கமாக வெளியிடப்படும் என்பதை நீதிமன்றம் ஜன.24 அன்று அறிவிக்க உள்ளது.

17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஞானவாபி மசூதி கட்டிடம், அதற்கு முன்னதாக அங்கே இருந்த கோயிலை ஆக்கிரமித்து கட்டப்பட்டதா என்பதை தீர்மானிக்கும் வழக்கு உத்திரபிரதேசத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கான ஆவணமாக, மசூதியில் அறிவியல் முறைப்படி தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. பலகட்டங்களாக நடந்து முடிந்த ஆய்வின் முடிவுகள் சீலிடப்பட்ட கவரில் அறிக்கையாக வாராணசி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நீதிமன்ற விசாரணை

முன்னதாக காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டிய வளாகத்திற்குள் இந்து சிலைகள் மற்றும் தெய்வங்கள் இருப்பதாகக் கூறி, மசூதி வளாகத்திற்குள் வழிபாடு நடத்த உரிமை கோரிய இந்து அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் மனுக்களை மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கின்போக்கில் கடந்தாண்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மசூதியினுள் அறிவியல் முறையிலான தொல்லியல் ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த ஆய்வு முடிவுகள் அடங்கிய அறிக்கை எப்போது பொதுமக்கள் பார்வைக்கு பகிரங்கமாக வெளியிடப்படும் என்ற கேள்வி பலதரப்பிலும் இருந்து எழுந்து வருகிறது. இதற்கிடையே ஞானவாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி, சீல் செய்யப்பட்ட அறிக்கை கசியாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு நீதிபதியிடம் கேட்டுக் கொண்டது. அறிக்கை யாருக்கும் கசியவிடப்பட மாட்டாது என்ற தனிப்பட்ட உறுதிமொழி பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்தாலன்றி அறிக்கை நகல் வழங்கப்படக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டது.

ஞானவாபி மசூதி

இந்த வழக்கு விசாரணையின் அங்கமாக இன்று கூடிய நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாக ஆய்வு குறித்த சீல் வைக்கப்பட்ட ’இந்திய தொல்லியல் துறையின் அறிக்கையை பகிரங்கமாக வெளியிடுவது அல்லது அறிக்கை நகல்களை இருதரப்பு கட்சியினருக்கும் வழங்குவது’ குறித்து தீவிர பரிசீலனை மேற்கொண்டது. நிறைவாக ஜனவரி 24 அன்று இவை தொடர்பாக முடிவு எட்டப்படும் என வாரணாசி நீதிமன்றம் இன்று அறிவித்தது.

இதையும் வாசிக்கலாமே...

x