விளையாட்டு கிராமமான வடுவூரில் கபடிக்கு கவுரவம்! - ‘கில்லி’ வீரர்களுக்கு மக்கள் பாராட்டு


திருவாரூர்: வடுவூரில் கபடிக்காக நுழைவு வாயில் அமைத்து வரும் கபடி வீரர்களின் முயற்சிக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் வடுவூர் கிராமம், தமிழகத்தின் விளையாட்டு கிராமங்களில் முன்னோடி கிராமமாக கருதப்படுகிறது. அதற்கு காரணம், இந்த ஊரில் வீட்டுக்கு ஒரு விளையாட்டு வீரர் இன்றளவும் உள்ளனர் என்பதுதான்.

விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டியில் 1964-ம் ஆண்டிலேயே தடகளத்தில் வடுவூரைச் சேர்ந்த ராஜசேகரன் பங்கேற்றார். இதன்மூலம், வடுவூரில் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட இளைஞர்கள் உருவாகத் தொடங்கினர். இதனால் தடகளம், வாலிபால், கபடி போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

குறிப்பாக, கபடி போட்டியில் இந்த கிராம மக்கள் அதிக அளவு கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த ஊரைச் சேர்ந்த ராஜ ராஜேந்திரன், பழனி, வேதராஜன் உள்ளிட்டோர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த கிராம மக்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் முன்னெடுப்பில் ரூ.6 கோடி மதிப்பில் உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. அத்தகைய பெருமை கொண்ட வடுவூர் கிராமத்தில், பல்வேறு கபடி குழுக்கள் உள்ள நிலையில், ஆசைத்தம்பி நினைவு கபடி கழகத்தினர் மாநில அளவிலான கபடி போட்டிகளை நடத்தி வருகின்றனர்.

வடுவூர் மேல் பாதியில் கபடிக்காக அமைக்கப்படும் நுழைவாயில்.

தற்போது இக்குழு சார்பில் வடுவூர் மேல்பாதியில் முத்து விழா நுழைவாயில் கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே முதல்முறையாக கபடி விளையாட்டுக்காக கட்டப்படுகின்ற முதல் நுழைவாயில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டு வீரர்களின் இந்த முயற்சிக்கு வடுவூர் கிராம மக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஏஎம்சி கபடி குழுவில் பங்கேற்று விளையாடி, காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற விருதாச்சலம் கூறியதாவது: “விளையாட்டு என்பது தனி மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, நற்பண்புகளையும் வளர்த்துக் கொள்கின்ற களமாகும். இதைப் புரிந்து கொண்டதால்தான் வடுவூர் கிராமத்தில் அதிக அளவில் விளையாட்டு வீரர்கள் உருவாகி நாட்டுக்காக விளையாடுவதுடன், பல்வேறு அரசு பணிகளிலும் சேர்ந்து பயன் பெற்றுள்ளனர்.

அத்தகைய வாய்ப்பை வழங்கிய விளையாட்டுகளில் எங்களது கிராமத்துக்கு கபடி முதன்மையாக உள்ளது. தற்போது ஆசைத்தம்பி கபடி குழு சார்பில் அமைக்கப்படும் இந்த அலங்கார வளைவு எதிர்கால தலைமுறையினருக்கு ஓர் தூண்டுகோலாக இருக்கும்” என்றார்.

x