இதுவரை 154 பேருக்கு இறுதி காரியம் - ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்யும் தன்னார்வலர் @திண்டுக்கல்


திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதரவற்றோர் உடல்களை தன்னலம் கருதாமல் அடக்கம் செய்து வருகிறார் தன்னார்வலர் வேல்குமார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் அருகே நடந்த விபத்தில் சபரிமலைக்கு சென்று விட்டு வாகனத்தில் வந்த சென்னை பக்தர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இறந்தோரின் குடும்பத்தினருக்குப் போதுமான வசதிகள் இல்லாததால் அவர்களால் உடல்களை சென்னைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

அதற்கான ஏற்பாடுகளை செய்து உதவினோம். அன்றிலிருந்து வசதி இல்லாதோர், ஆதரவற்றோர் இறந்து போனால் அவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய தொடங்கினோம் என்கிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த வேல்குமார். கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 154 உடல்களை அடக்கம் செய்துள்ளார்.

வேல்குமார்

ஆதரவற்ற நிலையில் சாலையோரம் இறந்து கிடப்போர், அடையாளம் தெரியாத உடல் என போலீஸாருக்கு தகவல் கிடைத்தால் உடனே அழைப்பது வேல்குமாரைத்தான். போலீஸ் வழக்குப்பதிவு, பிரேதப் பரிசோதனை நடைமுறைகள் முடிந்த பின்னர் உடலை வேல்குமாரிடம் ஒப்படைத்து ஒரு போலீஸாரையும் உடன் அனுப்புகின்றனர். அந்த ஆதரவற்ற உடலுக்கு இறுதி மரியாதையை இறந்தோரின் உறவினர்கள் செய்வது போலவே முறைப்படி சுடுகாட்டில் செய்து அடக்கம் செய்கிறார் வேல்குமார்.

ஒரு உடல் அடக்கம் செய்ய, சுடுகாட்டுக்கு உடலை கொண்டு செல்லும் வாகனச் செலவு, குழி தோண்டுவது, மாலைகள் உள்ளிட்டவை என ரூ.3,750 செலவாகிறது. இதை திண்டுக்கல்லில் உள்ள சிலர் இவருக்குக் கொடுத்து உதவுகின்றனர்.

அடக்கம் செய்யப்பட்ட ஆதரவற்றவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய
(வலது) வேல்குமார், காவலர் உள்ளிட்டோர். (கோப்பு படம்)

இதுமட்டுமல்லாமல் நகரில் ஆதரவற்றோர் எங்கு இருந்தாலும் அதுகுறித்து தகவல் தெரிவித்தால், அவர்களை காப்பகத்தில் சேர்க்கும் பணியிலும் ஈடுபடுகிறார். இது குறித்து வேல்குமார் கூறுகையில், ஆதரவற்றோர், வறுமையில் வாடுவோருக்கு உதவ அன்னபூரணி அறக்கட்டளை நடத்தி வருகிறேன்.

இதுவரை 154 உடல்களை முழு மரியாதையுடன் அடக்கம் செய்துள்ளேன். எனது பங்கு உழைப்பு மட்டும் தான். அனைத்துப் பொருள் உதவி, பண உதவிகளை திண்டுக்கல்லில் உள்ள பல நல்ல உள்ளங்கள் தொடர்ந்து செய்வதால்தான் என்னால் இந்தச் சேவையைத் தொடர முடிகிறது.

ஆதரவற்ற முதியோரை அழைத்துச் சென்று முகாம்களில் சேர்க்க, விசேஷங்களில் மீதமான உணவுகளை எடுத்துக்கொண்டு செல்ல வாகனம் வழங்கியவர், தனது பெயரைத் தெரிவிக்க விரும்பவில்லை. இதுபோல, உதவும் உள்ளங்கள் திண்டுக்கல்லில் அதிகம் பேர் உள்ளனர் என்று கூறினார்.

x