கர்நாடகாவில் 195 தாலுகாக்களில் வறட்சி.... 4,000 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கிறது மாநில அரசு!


கர்நாடகாவில் வறட்சி

கர்நாடகாவில் மழை பற்றாக்குறையால் 195 தாலுகாக்களில் வறட்சி பகுதியாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், பயிர் சேதத்தை பார்வையிட நாளை மத்தியக்குழு வருகை தருகிறது. இந்த நிலையில் தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 4,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடகா அரசு வைத்துள்ளது.

கர்நாடகாவில் வறட்சி

பருவமழை பொய்த்ததால் ஏற்பட்டுள்ள பயிர் சேதத்தை மதிப்பிடுவதற்காக மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள மத்தியக்குழு கர்நாடகாவிற்கு நாளை(அக்.5) செல்கிறது. பெலகாவி, விஜயபுரா, பாகல்கோட், தார்வாட், சித்ரதுர்கா, ஹாவேரி, கடக், கொப்பல், விஜயநகரா, சிக்கபல்லாபுரா, துமகுரு, தாவணகெரே ஆகிய மாவட்டங்களுக்கு இந்தக்குழு சென்று பயிர் சேதத்தை பார்வையிட உள்ளது.

இக்குழுவினர் நாளை முதல் ஐந்து நாட்களுக்கு 12 மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்து அதன் அறிவிக்கையை மத்திய அரசு சமர்பிக்க உள்ளனர். கர்நாடகா முதல்வர் சித்தராமையா மத்திய ஆய்வுக்குழுவினருடன் ஆலோசனை நடத்தி மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளிக்க உள்ளார்.

இதன் அடிப்படையில் கர்நாடகா அரசுக்கு இழப்பீடு வழங்கப்படும். மழை பற்றாக்குறையால் 31 மாவட்டங்களில் கர்நாடகா அரசு ஏற்கெனவே ஆய்வு செய்து 195 தாலுகாக்கள் வறட்சிப் பகுதியென அறிவித்துள்ளது. இதில் 161 தாலுகாக்களில் கடுமையான வறட்சி பாதித்ததாகவும், 34 தாலுகாக்களில் மிதமான வறட்சி பாதித்ததாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

முதலமைச்சர் சித்தராமையா

கர்நாடகா அரசு ரூ.28,000 கோடிக்கும் அதிகமான பயிர் இழப்பை மதிப்பீடு செய்துள்ளது. இந்த நிலையில் 4,000 கோடி ரூபாயை இழப்பீடாக தேசிய பேரிடர் நிவாரண நிதியின் (என்டிஆர்எஃப்) திட்டத்தின் கீழ் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கர்நாடகா அரசு கடிதம் எழுதியுள்ளது.

தென்மேற்கு பருவமழையின் மொத்த உணவு உற்பத்தி இலக்கில் 52 சதவீத இழப்பை மாநிலம் சந்தித்துள்ளதாக கர்நாடகா வேளாண் அமைச்சர் என்.சலுவராயசாமி தெரிவித்துள்ளார். 40 லட்சம் ஹெக்டேரில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நெல், ராகி மற்றும் ஜவ்வரிசி அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் என்.சலுவராயசாமி தெரிவித்துள்ளார்.

x