வரலாற்றில் சுவாரசியம்... மகாத்மா காந்தியின் ‘கைப்பிடி மாவில்’ பிறந்த மகளிர் கல்லூரி!


காந்தியும் அவரது கனவில் உதயமான கல்லூரியும்

மகாத்மா காந்தி முன்னெடுத்த கைப்பிடி மாவு கோரிக்கை காரணமாக, அன்று சுதந்திர போராட்ட வீரர்களின் வயிற்றுப் பசி தீர்ந்ததோடு இன்று சுமார் 1000 மகளிரின் கல்லூரிக் கனவுகள் நனவாகி வருகின்றன.

வரலாற்றின் பக்கங்கள் சுவாரசியமானவை. உருக்கமானவை. இன்றைக்கும் அவை தொடர்ந்து நினைவுகூரப்பட்டு வருகின்றன. அப்படியான சுவாரசியங்களில் ஒன்றாக லக்னோ பகுதியில் அமைந்திருக்கும் சுட்கி பந்தர் பெண்கள் கல்லூரியின் தோற்றம் அமைந்திருக்கிறது.

1921ல் இப்பகுதியில் விடுதலை வேள்வியில் ஈடுபட்டிருந்த சுதந்திர போராட்ட வீரர்கள் கடும் பசிக்கும் அது தொடர்பான இதர இன்னல்களுக்கும் ஆளானார்கள். அப்போது இங்கு பயணம் வந்த மகாத்மா காந்தி காதுகளுக்கும் இந்த தகவல் போயிருக்கிறது.

காந்தியால் உருவான பள்ளி இன்று கல்லூரியாக...

இதனையடுத்து, அப்பகுதிவாழ் மகளிருக்கு காந்தி அறைகூவல் ஒன்றை விடுத்தார். ’விடுதலைக்காக போராடும் வீரர்களின் உயிர் பசியால் போகக் கூடாது. இந்தப் பகுதியின் பெண்கள் மனது வைத்தால் அவர்களின் அரை வயிறாவது நிரம்பும். வீடுதோறும் சமைக்கும் முன்னராக, குறைந்தது சிட்டிகை மாவு எடுத்து தனியே வையுங்கள். இப்படி வீடுதோறும் சேரும் கோதுமை மாவினை விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான உணவு தயாரிப்பில் பயன்படுத்தலாம்’ என்று யோசனை தெரிவித்தார்.

காந்தி விடுத்த சிட்டிகை கோரிக்கைக்கு இணங்கி, வீடுதோறும் சிட்டிகைக்கு பதிலாக குறைந்தது கைப்பிடி மாவு எடுத்து தனியாக வைத்தார்கள். அப்படி அந்த ஊர் பெண்கள் முழுவதும் மாவு தந்ததில், விரைவில் தேவைக்கு அதிகமாகவே அவை சேர்ந்தன. காந்தியின் யோசனைப்படியே தேவைக்கு எஞ்சியதை வெளியே விற்றார்கள். அப்படி விற்றதில் ரூ64.25 கிடைத்தது. அக்காலத்தில் அது மிகப்பெரும் தொகை.

மகாத்மா காந்தி

இப்போதும் காந்தியே வழிகாட்டினார். ’இந்த தொகை வீடுதோறும் பெண்கள் அளித்த மாவு மூலம் திரண்டது. எனவே அதில் கிடைத்த தொகையும் அவர்களுக்கே செலவிடப்பட வேண்டும். இந்தப் பகுதியில் பெண்களுக்கான பள்ளி ஒன்றை உருவாக்குங்கள்’ என்றார்.

அப்படித்தான் 1921ம் ஆண்டு இங்குள்ள ஹுசைங்கஞ்சில், சுட்கி பந்தர் பெண்கள் பள்ளி நிறுவப்பட்டு பின்னாளில் கல்லூரியாகவும் வளர்ந்தது. இன்று சுமார் ஆயிரம் மாணவிகள் இங்கு படிக்கின்றனர். சிட்டிகை மாவு பெயரில் காந்தி முன்னெடுத்த அன்றைய புதுமையான முயற்சி, தற்போது மகளிர் கல்லூரியாக ஆண்டுக்கு ஆயிரம் பெண்களின் உயர்கல்விக்கு உதவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

கடவுளே என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார்... நடிகை குஷ்பு நெகிழ்ச்சி!

அதிர்ச்சி... 4,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை!

x