சாத்தூர்: வெம்பக்கோட்டை அகழாய்வில் இலை வடிவிலான சுடுமண் வடிதட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் கடந்த ஜுன் 18ம் தேதி 3ம் கட்ட அகழ்வாய்வு பணியை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். 3ம் கட்ட அகழ்வாய்வில் இதுவரை சங்கு, மாவு கல்லால் ஆன கழுத்தில் அணியக் கூடிய அணிகலனில் கீழே கோர்க்கப்படும் தொங்கணி, நாயக்கர் கால செம்பு நாணயம், சங்கு வளையல்கள் மற்றும் கழுத்தில் அணியும் சுடு மண்ணால் ஆன பதக்கம், கண்ணாடி மணிகள், கல்மணிகள் உள்ளிட்பட 650க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இலை வடிவிலான சூடு மண்ணால் செய்யப்பட்ட வடிதட்டு ஒன்று இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. திடப் பொருளிலிருந்து திரவப் பொருளை பிரித்தெடுக்க முன்னோர்கள் இதை பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.