வாணியம்பாடி: கி.பி.16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால நடுகற்கள் கண்டெடுப்பு


திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கி.பி.16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர்கால 3 நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசியர் முனைவர் க.மோகன் காந்தி தலைமையில், வரலாற்று ஆர்வலர் காணிநிலம் மு.முனிசாமி, வாணியம்பாடியைச் சேர்ந்த சித்த வைத்தியர் சீனிவாசன் ஆகியோர் வாணியம்பாடி பகுதியில் மேற்கொண்ட கள ஆய்வில் வரலாற்றுச் சிறப்பு மிக்க 3 நடுகற்களைக் கண்டெடுத்துள்ளனர்.

இது குறித்து முனைவர் க.மோகன்காந்தி கூறியதாவது,"திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நாங்கள் நடத்திய கள ஆய்வில் வரலாற்றுச் சிறப்புமிக்க நடுகற்களைக் கண்டறிந்தோம். அதில், முதலாவது நடுகல்லானது வாணியம்பாடியை அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தில் தருமராஜா - திரௌபதி அம்மன் கோயில் கருவறைக்கு அருகில் சுமார் 1.5 அடி உயரத்துடன் சிறிய அளவில் காணப்பட்டது.

வலது கையில் வாளை ஏந்திய கோலத்தில் இந்த நடுகல் காணப்படுகிறது. இந்த நடுகல் மக்கள் வழிபாட்டில் உள்ளது. இங்குள்ள கோயில் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. மீன், பாம்பு உள்ளிட்ட உயிரினங்களின் சிற்பங்கள் இந்த கோயில் மேல் கூரைகளில் காணப்படுவது சிறப்புக்குரியதாகும். இரண்டாவது நடுகல் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த கி.பி 16ம் நூற்றாண்டு உடன்கட்டை நடுகல்லாகும்.

இந்த நடுகல்லை இந்த ஊர் மக்கள் மலைதேவன் சிலை என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். 2.5 அடி அகலமும் 2.5 அடி உயரமும் உள்ள இந்த நடுகல் 2 அடி ஆழத்திற்குப் புதைந்து காணப்படுகிறது. இந்த சிலையின் அமைப்பானது, நடுகல் வீரனின் தலைமுடி வாரி முடிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டையாக அது காட்சித்தருகிறது. இதன் காதுகளில் குண்டலங்கள் காணப்படுகிறது.

வலது கையில் குறுவாள் ஒன்றை ஏந்திய கோலத்தில் நடுகல் வீரன் உள்ளார். வீரனின் வலது பக்கத்தில் ஒரு பெண்மணியின் உருவம் இடம் பெற்றுள்ளது. இப்பெண் இந்த நடுகல் வீரனின் மனைவி ஆவார். வீரன் போரில் வீரமரணம் அடைந்தவுடன், அவனுடைய மனைவியும் நெருப்பில் இறங்கி உயிர் விட்டிருப்பாள். கணவனோடு மனைவியும் உயிர்விடுவதை உடன்கட்டை ஏறுதல் எனப்படும்.

மூன்றாவது நடுகல்லும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த கி.பி 16 ம் நூற்றாண்டு நடுகல்லே ஆகும். இந்த நடுகல் வாணியம்பாடிக்கு அருகேயுள்ள திகுவாபாளையம் என்ற ஊரில் பிட்டாய் கவுண்டர் வட்டத்தில் பிரபு குமார் என்பவர் நிலத்தில் உள்ளது. இந்த நடுகல்லின் அமைப்பானது 3 அடி உயரமும் 2.5 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. நடுகல் வீரனின் இடது கையில் தண்டு போன்ற ஆயுதம் ஒன்றும், வலது கையில் நீண்ட வாள் ஒன்றைத் தரையில் ஊன்றியபடியும் நிற்கின்றார்.

இந்த வீரன் போரில் வீரமரணமடைந்ததால் அவரது மனைவி உடன்கட்டை ஏறித் தன் உயிரை விட்டுள்ளார். உடன்கட்டை ஏறியதற்கான அடையாளமாக வலது கையில் கள்குடம் ஒன்றைத் தாங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் காணப்படும் இது போன்ற அரிய வகை வரலாற்றுச் சிறப்புமிக்க நடுகற்களை மாவட்ட நிர்வாகம் பாதுகாக்க முன் வர வேண்டும்" என்று மோகன்காந்தி கூறினார்.

x