விமானப் பயணிகளுக்கு குட்நியூஸ்... டிக்கெட் கட்டணத்தில் எரிபொருள் விலையை ரத்து செய்தது இண்டிகோ!


பயண கட்டணத்தில் எரிபொருள் விலை ரத்து.

இண்டிகோ விமான நிறுவனம் பயணக்கட்டணத்தில் எரிபொருள் விலையை, இன்று முதல் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இண்டிகோ விமானம்.

பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ, கடந்த ஆண்டு அக்டோபர் மாத துவக்கத்தில், விமான எரிபொருளின் விலை உயர்வு காரணமாக பயணக்கட்டத்தில் எரிபொருள் விலை என்ற காரணத்தை குறிப்பிட்டு, பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து வந்தது.

இந்த நடவடிக்கையை துவங்கி, 3 மாதங்களுக்குப் பிறகு தற்போது இந்த எரிபொருள் விலையை, பயணக்கட்டணத்தில் இருந்து நீக்கியுள்ளதாக இண்டிகோ அறிவித்துள்ளது. எரிபொருள் கட்டண ரத்தானது இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இண்டிகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமான டர்பைன் எரிபொருள் (ஏடிஎஃப்) விலை சமீபத்தில் குறைந்ததால் எரிபொருள் கட்டணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஏடிஎஃப் விலை அவ்வப்போது மாறுபடும் என்பதால் அவ்வப்போதைய நிலைமைக்கேற்ப விமான கட்டணம் மாற்றியமைக்கப்படும்" என தெரிவித்துள்ளது.

விமான எரிபொருள்.

எரிபொருள் கட்டணங்கள் நீக்கப்பட்டதால் இண்டிகோ விமான பயணக் கட்டணம் குறைந்துள்ளது. கடந்த அக்டோபரில், இண்டிகோ நிறுவனம், 500 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.300, 501-1,000 கிலோ மீட்டருக்கு ரூ.400, 1001-1500 கிலோ மீட்டருக்கு ரூ.550, 1,501-2,500 கிலோ மீட்டருக்கு ரூ.650, 2,501-3,500 கிலோ மீட்டருக்கு ரூ.800 மற்றும் 3,500 கிலோ மீட்டருக்கு மேல் ரூ.1,000 எரி பொருள் கட்டணமாக விதித்தது.

தற்போது விமான எரிபொருள் விலை குறைந்துள்ளதால் இந்த கட்டணத்தை நீக்கி, இண்டிகோ அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு விமானப் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

x