பெற்றோர் கவனத்துக்கு... குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் ஒளிந்திருக்கும் விபரீதம்... சிறுவனின் நுரையீரலுக்குப் போன ‘எல்இடி’ விளக்கு!


குழந்தையின் நுரையீரலில் இருந்து அகற்றப்பட்ட எல்இடி பல்பு

குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களில் அடங்கியிருக்கும் ’எல்இடி பல்பு’ ஒன்று, சிறுவனின் நுரையீரலுக்கு போனதும், அதனை வெளியில் எடுக்க மருத்துவர்கள் போராடியதுமான கேரள சம்பவம் ஒன்று குழந்தை வளர்ப்பை மேற்கொள்ளும் பெற்றோர்களுக்கு படிப்பினையாகி இருக்கிறது.

குழந்தைகள் விளையாடுவதற்கான பொம்மைகள் மற்றும் இதர சாதனங்களை அவர்களுக்கு வழங்குவதில் பெரும் கவனம் தேவைப்படுகிறது. பொம்மைகளை தயாரிப்பதற்கான வேதி சேர்மானங்கள், அவற்றின் மீதிருக்கும் விஷப்பூச்சு, பொம்மைகளின் எளிதில் உடையக் கூடிய பாகங்கள் என பெற்றோரின் கவனத்தைக் கோரக் கூடியவை ஏராளம் இருக்கின்றன.

எக்ஸ்ரே படம்; நுரையீரலில் எல்டிடி பல்பு

அதிலும் மலிவு விலையில் கிடைக்கும் சீன தயாரிப்புகள் ஆபத்தானவை. அவற்றின் விற்பனைக்கு அரசே பலமுறை தடை விதித்திருக்கிறது. ஆனபோதும் அவை சந்தையில் கிடைக்கவே செய்கின்றன. பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத இந்த விலை குறைவான விளையாட்டுப் பொருட்களை குழந்தைகளின் விளையாடக் கொடுப்பதால் நேரும் பின்விளைவுகளுக்கு பின்னர் பெரும் விலை கொடுக்க நேரிடலாம்.

கேரளாவில் விளையாட்டு பொம்மையில் இருக்கும் எல்இடி பல்பு ஒன்று எப்படியோ ஒரு சிறுவனின் நுரையீரலுக்குப் போயிருக்கிறது. தொடக்கத்தில் அதனை அவனது பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினரும் கவனிக்கவில்லை. ஆனால் மூச்சுவிட சிரமம், தொடர் இருமல் என ஒரு வாரமாக குழந்தை அவதி அடைந்த பின்னரே அவர்கள் மருத்துவனைக்கு சென்றனர்.

அங்கே ஸ்கேன் செய்து பார்த்ததில் 2.5 செமீ அளவிலான ‘எல்இடி பல்பு’ ஒன்று வலது நுரையீரலின் கீழ் பகுதியில் ஒளிந்திருந்ததை மருத்துவர்கள் கண்டுகொண்டனர். பின்னர் மருத்துவக் குழு கலந்தாலோசனை செய்து ‘பிரான்கோஸ்கோபி’ நுட்பம் வாயிலாக, அதனை வெளியே எடுக்க முடிவு செய்யப்பட்டது.

எல்இடி பல்புகள்

உடலின் உள்ளுறுப்புகளை பரிசோதிக்கவும், அறுவை சிகிச்சை அளிக்கவும் உதவும் எண்டோஸ்கோபி உபாயம் போன்றே, நுரையீரல் சார்ந்த பிரத்யேக அணுகலுக்கு பிரான்கோஸ்கோபி உதவுகிறது. கொச்சி அமிர்தா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரான்கோஸ்கோபி அணுகலில், சிறுவனின் நுரையீரலில் பதுங்கியிருந்த ‘எல்இடி பல்பு’, அறுவை சிகிச்சை இன்றி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

வழக்கமாக இது போன்ற சிறு பொருட்கள் கையில் கிடைக்கும்போது, அவற்றை விளையாட்டுப் போக்கில் குழந்தைகள் விழுங்கவே செய்வார்கள். கோட்டயத்தை சேர்ந்த இந்த ஆண் குழந்தையை பொறுத்தளவில், உணவுக் குழலுக்குள் செல்ல வேண்டிய ‘எல்இடி பல்பு’ மூச்சுக் குழலுக்கு சென்றதில், நுரையீரலில் தேங்கி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.

சிறு குழந்தைகளை பராமரிக்கும் பெற்றோர், அவர்களுக்கு வழங்கும் பொம்மைகள் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களில் எச்சரிக்கையாக இருப்பதோடு, விளையாடும் குழந்தைகள் மீது சதா கவனம் காட்டுவதும் முக்கியம் என்பதை இந்த கேரள சம்பவம் உணர்த்தி உள்ளது.

x