சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய பெய்த கனமழை: சிரமத்துக்குள்ளான மாணவர்கள்!


கோப்புப் படம்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக இன்று காலை பள்ளிக்கு செல்ல மாணவர்களும், பணிக்கு செல்ல தொழிலாளர்களும் சிரமத்துக்குள்ளாயினர்.

கேரளா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வலு குறைந்துள்ளது. இந்நிலையில், தமிழக கடலோர மாவட்டங்களில் மழை வாய்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வந்தது.

இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வந்தது. இதேபோன்று நேற்று காலை முதலே கடும் வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று சென்னை, புறநகரில் மாலை நேரத்தில் பலத்த காற்றுடன், பரவலாக மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து நள்ளிரவிலும் தொடர்ந்த மழை, அதிகாலையும் நீடித்தது. விடிய, விடிய கனமழையாக கொட்டித் தீர்த்ததால், சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கி இருந்த நிலையில், மாணவர்கள் சீருடையுடன் பள்ளிக்கு செல்ல சிரமப்பட்டனர்.

தொழிலாளர்களும், அலுவலக பணியாளர்களும் கொட்டும் மழையில் பணிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டப்படி சென்றனர். கடந்த சில தினங்களாக மாநகரில் புழுக்கம் நிலவி வந்த நிலையில், விடிய, விடிய கொட்டிய கனமழையால் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி சென்னை, புறநகரில் அதிகபட்சமாக சோழிங்க நல்லூரில் 12 செ.மீ, சென்னை அடையார், எண்ணூர், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ, சென்னை கத்திவாக்கம், கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், கொளத்தூர், செம்பரம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ, ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், மணலி, அண்ணாநகர், தேனாம்பேட்டை, ஐஸ் ஹவுஸ், கேளம்பாக்கம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

x