மதுரை சிறை சந்தையில் குவிந்த பொதுமக்கள்: ஆடிப்பெருக்கு சிறப்பு விற்பனை தொடக்கம்!


மதுரை: ஆடிப்பெருக்கையொட்டி, மதுரை மத்திய சிறைவாசிகள் தயாரிக்கும் பல்வேறு பொருட்களை சிறை சந்தை மூலம் மக்கள் வாங்கும் விதமாக சிறப்பு விற்பனை தொடங்கி நடந்து வருகிறது.

தமிழக சிறைத்துறை மூலம் சிறைவாசிகளை நல்வழிப்படுத்தும் விதமாக பல்வேறு வகையான தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வரப்படுகின்றன. இவ்வாறு பயிற்சி பெற்ற சிறைவாசிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தமிழகம் முழுவதும் உள்ள சிறைசந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறான சந்தைகளில் தமிழகத்திலேயே முதல்முறையாக பிரம்மாண்டமான முன்மாதிரியான சந்தையாக மதுரை மத்திய சிறை சந்தை அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு சிறைவாசிகள் தயாரிக்கும் இனிப்பு, கார வகைகள், எண்ணெய் பொருட்கள் மட்டுமின்றி அவர்களது கலைத்திறன் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும் வகையில் கட்டில், டைனிங் டேபிள், பீரோ, மர அலங்கார வேலைபாடுகளைக் கொண்ட பொருட்கள், இரும்பு பொருட்களின் விற்பனையும் மும்மரமாக நடந்து வருகிறது. பொதுமக்களின் விருப்பத்துக்கு ஏற்ப தேவையான வடிவங்களில் மர வேலைபாடு பொருள்கள் குறித்த நேரத்தில் தயார் செய்து வழங்கப்படுகிறது.

அலங்காநல்லூர் பெரிய குலசை கிராமத்தைச் சேர்ந்த தமிழினியன் மற்றும் சக்தி தம்பதிகளின் புதுமனை கட்டிடப் பணிகளுக்கு தேவையான நிலை கதவுகள், மர ஜன்னல் ஆகியவற்றை சிறைவாசிகள் மூலம் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டு, அவர்கள் விரும்பிய வடிவில் தயாரித்த மரப் பொருட்களை மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி, சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் விற்பனை செய்தனர்.

தற்போது, ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது. இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள், “மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர் தயாள் அறிவுரையின் பேரில் மர வேலைப்பாடு மற்றும் இரும்பு வேலைப்பாடு பிரிவு ஆகியவை தொடங்கப்பட்டு செயல்படுகின்றன. இவற்றின் மூலம் பொதுமக்களின் விருப்பம், தேவைக்கேற்ப பொருட்கள் மிக குறைந்த விலையில் தயார் செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.

சமீபத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது மகளின் திருமணத்திற்கு தேவையான சீர்வரிசை பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்தனர். தொடர்ந்து வருகிற செப்டம்பர் மாதத்திற்கு தேனி, மதுரையில் நடக்கும் இரண்டு திருமணத்திற்கான சீர்வரிசை பொருட்களும் சிறைவாசிகள் மூலம் தயாரிக்க, ஆர்டர் பெறப்பட்டுள்ளது.

தற்போது, மக்கள் மத்தியில் சிறையில் தயாரிக்கும் பல்வேறு பொருட்களுக்கான மதிப்பும் உயர்ந்துள்ளது. இந்த வாய்ப்பை மக்களும் பயன்படுத்தி கொண்டு தேவையான பொருட்களை வாங்கலாம். இது சிறைவாசிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும் இருக்கும். எங்களது இந்த சீர்திருத்த பணியில் பொதுமக்களின் பங்களிப்பையும் வேண்டுகிறோம்” என்று தெரிவித்தனர்.

x